இன்று முதல் வாகனங்களில் வரும் மளிகைப் பொருட்கள்!

by Editor / 31-05-2021 07:38:37am
இன்று முதல் வாகனங்களில் வரும் மளிகைப் பொருட்கள்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கோர தாண்டவம் ஆடிய கொரோனா தொற்று கடந்த ஒன்பது நாட்களாக மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே மாநிலம் முழுவதும் நிபந்தனைகளற்ற ஊரடங்கு இருந்த நிலையில், இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படும் என மே 28 ஆம் தெதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன் படி, தமிழ்நாட்டில் ஜுன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் தொடங்குகிறது. ஊரடங்கு தொடர்ந்தாலும், இந்த ஊரடங்கில் அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் காய்கறி மற்றும் பழங்களைப் போலவே மளிகை பொருட்களையும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. வணிகர் சங்கங்களுடன் இணைந்து வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை வீடு வரை கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தொலைபேசி மற்றும் இணைய முறையில் மக்கள் மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை கடைகளிலிருந்து ஆர்டர் செய்து வாங்கலாம். மக்கள் கொடுக்கும் ஆர்டர்களின் படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டுக்கே சென்று பொருட்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவும் வகையில், நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய நிறுவனங்களான நிதி வர்த்தகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களுடன் இயங்கும். ஏற்றுமதி நிறுவனங்கள் உட்பட சில வரையறுக்கப்பட்ட தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பணியாளர்களுக்கான பாதுகாப்பான வாகன ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும். மேலும், தொழிற்சலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், தொற்று எண்ணிக்கை அதிகமாக ஏறிக்கொண்டிருக்கும் கோயம்பத்தூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த அனுமதிகள் அளிக்கப்படவில்லை.

முன்னதாக,  கட்டுக்கடங்காமல் போன கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35,000-ஐத் தாண்டிய நிலையில், மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. எனினும், மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் சுற்றவே, மே 24 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை 6 மணி வரை இந்த ஊரடங்கின் கால அளவு இருந்தது.

இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி ஜூன் மாதம் 7 ஆம் தேதி காலை வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால்  ஏற்பட்டுள்ள பயன் தெரியத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில் ஒரு நாள் தொற்றின் அளவு குறையத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் ஊரடங்கு நீட்டிப்பு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் வண்டிகள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும்.

- உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளில் தள்ளுவண்டிகள் / வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

- தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்பவர்களுக்கு எந்த தடையும் இல்லை. உரிய ஆவணங்களை காட்டி அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

- ஆன்லைன், தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை அவர்களுக்கு வழங்கவும் உத்தரவு.

- ஜூன் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

- தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் மீது தற்போது உள்ளது போல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

 

Tags :

Share via