தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் - 5 பேர் கைது

by Admin / 27-06-2021 03:39:40pm
தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த  இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 2500 கிலோ  எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் - 5 பேர் கைது

 

தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெர்மல் (பீச்) கடற்கரை வழியாக இலங்கைக்கு விரல் மஞ்சள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயக்குமார்  உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர். கணேஷ்க்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில்,தனிப்படையினர் இன்று அதிகாலை தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
 
அப்போது 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள்கள் ஒரு வேனிலிருந்து படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே மேற்படி தனிப்படையினர் கடத்த இருந்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ விரல் மஞ்சளின் இந்திய மதிப்பு ரூபாய் 3 லட்சமாகும். ஆனால் இவற்றின் இலங்கை மதிப்பு ருபாய் 16 லட்சம் வரையிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலுவைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள் (36), சுனாமி காலணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா (19), கீழ வைப்பாரைச் சேர்ந்த அருள் மகன் ராபின்ஸ்டன் (23), அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் அருள் (55), ஜேசு மகன் விதுஸ்டன் (20) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

மேற்படி கடத்தல் சம்பவம் தெர்மல் நகர் மெரைன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் பறிமுதல் செய்த 2500 கிலோ விரல் மஞ்சள், படகு மற்றும் வேன் ஆகியவற்றையும், கைது செய்த 5 பேரையும் மெரைன் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து  கடற்படை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via