உச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவிப்பு

by Staff / 13-11-2018
உச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவிப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த அதிபர் சிறிசேனா, அவரை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை அதிபர் கடந்த 9ம் தேதி கலைத்தார். பொதுத் தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபக்சேயும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, தனது தொண்டர்கள் தொடங்கிய இலங்கை மக்கள் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 10 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘‘இலங்கை அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 19வது திருத்தத்தின்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை. இதனால், ‘‘இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக தேர்தல் நடைபெறுவதை தடுக்க முடியும்’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், நவம்பர் 19-ம் தேதி வரை நாடாளுமன்றத்தை கலைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கும் தடை விதித்து. மேலும் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். தீர்ப்புக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் நாளையே நாடாளுமன்றத்தை கூட்டினாலும், பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து, ராஜபக்சே அணியினர் வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via