நீட் தேர்வால் மாணவர், தந்தை தற்கொலை - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

by Staff / 15-08-2023 04:10:24pm
நீட் தேர்வால் மாணவர், தந்தை தற்கொலை - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வசேகர் மகன் ஜெகதீஸ்வரன்(19). இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். மேலும், மகன் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல், அவரது தந்தை செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: நீட் தேர்வு தோல்வியால் மாணவர்ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல், தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இருவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பொய் பேசி ஏமாற்றுவதைக் கைவிட்டு, இனியாவது சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி: தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது, பணத்தை வாரி இறைத்து நீட் தேர்வு மையத்தில் பயின்றவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்றாகிவிட்டது. இந்த அநீதியைத் தடுக்கும் வகையில், நீட் தேர்வு மையங்கள் விவகாரத்தில்தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்: மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருவதுதான் கல்வியின் கடமை. ஆனால், அந்தக் கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு, கல்லூரித் தேர்வுகள், அரசுப் பணித் தேர்வுகள், குடிமையியல் பணித் தேர்வுகள் என ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்கு உரியது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அரியலூரில் அனிதா தொடங்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை என்பது தீர்வாகாது என்பதை மாணவர்கள் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். தமாகா தலைவர் ஜி. கே. வாசன்: அகில இந்திய அளவில் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்று தற்கொலை செய்து கொண்டமாணவரின் செயல் மிகவும் வருந்தத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்: பெற்றோரும், மாணவர்களும் இந்த அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் கைகோர்க்க வேண்டும். மனம் தளர்ந்து வேதனையான முடிவுகளுக்கு செல்லக் கூடாது. தமாகா இளைஞரணி தலைவர் எம். யுவராஜா: தமிழக மாணவர்கள், திமுக அரசால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அதிகமாக நம்பினார்கள். அதில் ஏற்படும் தோல்விகளே நடைபெற்றுவரும் தற்கொலைகளுக்கு காரணம். திமுக அரசு தனது பொய்யான வாக்குறுதிகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வைரத்து செய்யும் வரை தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல, திக தலைவர் கி. வீரமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via