அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

by Editor / 30-01-2024 04:21:01pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, 1கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகைபாலனை நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் இன்று இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. அத்துடன் பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இன்று எடப்பாடி பழனிச்சாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை.

 

Tags : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

Share via