கடத்தப்பட்ட சிறுவனை அதிரடியாக மீட்ட காவல்துறை

by Editor / 30-08-2021 11:19:26am
கடத்தப்பட்ட சிறுவனை அதிரடியாக மீட்ட காவல்துறை

சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் அமைந்துள்ள நச்சுவாயனூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பழனிசாமி - லதா தம்பதிகள். இவர்களுடைய மகன் சபரிக்கு வயது 14. இவர் ஆகஸ்ட் 22ம் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுவனைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி சிறுவனின் தாய் லதா பணியாற்றும் துணிக்கடை உரிமையாளர் சரவணன் தொலைபேசிக்கு வந்த அழைப்பில் மர்ம நபர் ஒருவர் சிறுவனை தான் கடத்தி வைத்துள்ளதாகவும், 50 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவன் கடத்தப்பட்டதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் தனிப்படைகளை அமைக்கப்பட்டன. செல்போனில் பேசிய இடங்கள், நேரம் போன்ற தகவல்களின் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட இடம் சேலம் மாநகர் குகை பகுதி என்பதும், கடத்தியவர் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வகுமார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

அவர் சீலநாயக்கன்பட்டி எம்ஜிஆர் நகரில் குடியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்று விசாரித்த போது செல்வகுமார் அங்கு இல்லை . தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் செல்வகுமாரை கைது செய்தனர். அவர் பணத்திற்காக சிறுவனை கடத்தியது தெரியவந்தது.
ஆகஸ்ட் 22ம் தேதி மேட்டூர் சென்று மது அருந்திவிட்டு சிந்தாமணியூர் அருகே திரும்பி வரும்போது ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவனை காரில் கடத்திக் கொண்டு வந்து பராசக்தி நகரில் அடைத்து வைத்திருப்பதாக கூறிய தகவலின் பேரில் அங்கு சென்று சிறுவனை தனிப்படையினர் மீட்டனர். மகனை பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவல்துறைக்கு சிறுவனின் தாய் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது அப்பகுதியில் இருந்தவர்களை நெகிழ வைத்தது

 

Tags :

Share via