சிந்திச்சு அறிக்கை விடுங்க எடப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

by Editor / 21-09-2021 03:23:32pm
 சிந்திச்சு அறிக்கை விடுங்க எடப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரிலுள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் சொரக்கல்பட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதல்வர் எடப்பாடி கடலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சில இடங்களில் இயங்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் எங்கு நெல் கொள்முதல் நிலையம் இயங்கவில்லை என்பதனை அவர் பார்த்தார் என எங்களுக்கு தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் எந்தவொரு கொள்முதல் நிலையங்களும் மூடப்படவில்லை. தற்போது 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் ஆட்சியில் கடந்த ஆண்டு இந்த சமயத்தில் 68 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் இயங்கியது. அதனால் எடப்பாடி பழனிசாமி நெல் கொள்முதல் நிலையம் குறித்து வடிகட்டின பொய் கூறி வருகிறார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை விடுவதற்கு செய்தி இல்லை. ஆகையால் அறிக்கை விடும் போது சிந்தித்து அறிக்கை விட வேண்டும்" என்றார். முன்னதாக இதுதொடர்பாக அறிக்கை விட்டிருந்த எடப்பாடி, "நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் முழு அளவில் நடைபெறவில்லை. டோக்கன் வழங்கி 15 நாட்களுக்கு மேலாகியும், விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாக்கு இல்லை.

எனவே நீங்களே சாக்கு வாங்கி வாருங்கள் என்று விவசாயிகளிடம் கூறுதல், தார்ப்பாய் இல்லை, நெல் வைப்பதற்கு இடம் இல்லை என்று கொள்முதல் நிலைய அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாகவும், இதனால் விவசாயிகள் கொண்டுவந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளாகிறது. விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, அவற்றை விவசாயிகளின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்க வேண்டும் என திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

Tags :

Share via