பேனருக்கு முற்றிலும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு

by Editor / 05-10-2021 05:31:55pm
பேனருக்கு முற்றிலும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு


தமிழ்நாட்டில் முழுமையாக பேனர்களுக்கு தடை விதிக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியில் திமுக நிர்வாகி பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இவரை வரவேற்பதற்காக மாம்பழப்பட்டு சாலையில் பல்வேறு இடங்களில் திமுக கொடிக்கம்பம் நடப்பட்டு அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கொடிக்கம்பம் நடும் பணியில் விழுப்புரம் ரஹீம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ்(12) என்ற சிறுவனும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சிறுவன் நட்ட கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. 


இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு  தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடிக்கம்பங்கள் பேனர்கள் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்கொன்றில் பேனர்கள் வைக்கப்பட மாட்டாது என்று திமுக தரப்பில் உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.


இதையடுத்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த காண்ட்ராக்டர் தான் 12 வயது சிறுவனை பணியில் அமர்த்தி இருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. மேலும் பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே கட்சியினர் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்றும், பேனர் வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் ” என்றார்.


இதனை பதிவு செய்துக் கொண்ட தலைமை நீதிபதி,”அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தான் சென்ற போது ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேனர்கள் வைப்பது முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசும், திமுகவும் ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via