சென்னைக்கு குடிநீர் தரும் 5 முக்கிய ஏரிகளில் 153 மில்லியன் கன அடி அதிகரிப்பு

by Editor / 07-10-2021 10:35:33am
சென்னைக்கு குடிநீர் தரும் 5 முக்கிய ஏரிகளில்  153 மில்லியன் கன அடி அதிகரிப்பு

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு கன மழை பெய்தது.இம்மழையால், 4 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதில், நேற்று காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 765 கன அடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,565 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 33.15 அடியாகவும் உள்ளது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு விநாடிக்கு 339 கன அடி மழைநீர் வருவதால், நீர் இருப்பு 2,934 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 19.61 அடியாகவும் இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 715 கன அடி நீர் வந்து கொண்டிக்கிறது. ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்இருப்பு 2,894 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 21.15 அடியாகவும் உள்ளது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 339 கன அடி நீர் வருகிறது. எனவே, சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 674 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 14.99 அடியாகவும் இருக்கிறது.

500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 35 கன அடி மழைநீர் வருவதால், அந்த ஏரியின் நீர் இருப்பு 458 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 35.21 அடியாகவும் உள்ளது.

மொத்தமாக 11,757 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகளில் நேற்று முன்தினம் 9,372 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அது நேற்று ஒரே நாளில் 153 மில்லியன் கன அடி அதிகரித்து 9,525 மில்லியன் கன அடியாக உள்ளது.

 

Tags :

Share via