கனவுக்கு கட்டுப்பாடு

by Admin / 30-07-2019
கனவுக்கு கட்டுப்பாடு

கந்தக நெடியும், கறிக்குழம்பு வாசனையும் கமகமக்கும் தீபாவளி வந்து விட்டது. புத்தாடை, இனிப்பு, பட்டாசு என மகிழ்ச்சியில் திளைக்கும் தீபாவளியென்பது இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கொண்டாடும் குதூகல விழா என்றால் மிகையல்ல.

கனவுக்கு கட்டுப்பாடு

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கார்காலத்தில் பூச்சிகள் மூலம் நோய் வராமல் இருக்க தீபமேற்றிய காலம் மெல்ல, மெல்ல தீபஒளி பண்டிகையாக உருமாறியது என்பது வரலாற்று ஆசிரியர் கூற்றாக உள்ளது. இருள் அகற்றி வெளிச்சம் ஏற்றும் இப்பண்டிகை பல்வேறு செய்திகளை நமக்குத் தருகிறது. உலகத்திலேயே உணவுக்கு அடுத்த பெரியது ஜவுளித்தொழில். தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையின் மூலம் இத்தொழில் அடையும் வளர்ச்சி பலமடங்கு லாபம் தரக்கூடியது. பட்டு, கைத்தறி மட்டுமின்றி புதிய டிசைன்களில் தயாராகும் ரெடிமேட் ஆடைகளை தயாரிக்கும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்தவற்றை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட பிரமாண்ட ஜவுளிக்கடைகளும், பல்லாயிரக்கணக்கான நடுத்தர, சிறிய ஜவுளிக்கடைகளும் உள்ளன. இவற்றில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் மட்டுமின்றி அக்கடைகளை நடத்துபவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் தீபாவளி பண்டிகை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. கரும்பு இல்லாமல் பொங்கலை கொண்டாட முடியாதது போல, பட்டாசு இல்லாமல் தீபாவளியை நினைத்துப் பார்க்க முடியாது. தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு தயாரிப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பட்டாசு தொழிலின் இலக்கென்பது தீபாவளி பண்டிகைதான். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிவகாசியில் இருந்து ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையாகிறது. ஜிஎஸ்டி, உச்சநீதிமன்ற கட்டுப்பாடு ஆகியவற்றால் இத்தொழிலில் தற்போது தேக்கம்ஏற்பட்டதை மறுக்க முடியாது. குடி கெடுக்கும் குடிக்கு ஆதரவும், பல குடிகளை வாழவைக்கும் வெடிக்கு கட்டுப்பாடா என்ற விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இவை மட்டுமின்றி இனிப்பு, நகை வியாபாரமும் தீபாவளி பண்டிகையின் அங்கமாக உள்ளது. தீபாவளி பண்டிகை ஏற்படுத்தும் மகிழ்ச்சியென்பது மனிதர்களின் மனநிலை சார்ந்தது மட்டுமல்ல. அது தொழில் உற்பத்தியையும் சார்ந்ததாகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியென்பது தொழில் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. அதற்கு இத்தகைய பண்டிகைகள் முக்கிய காரணமாக உள்ளன. தீபாவளி கொண்டாட்ட மனநிலை என்பது ஒரு நாளோடு நமக்கு முடிந்து விடுகிறது. ஆனால், இப்பண்டிகையை நம்பி உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு தீபாவளி என்பது மகிழ்ச்சி தரும் பெருங்கனவு. அவர்களின் வாழ்விற்கு விடியல் தரும் வெளிச்ச நாள். கனவுக்கு கட்டுப்பாடு இருந்தாலும், குதூகலம் குறையாது என்பதென்னவோ நிச்சயம்.

Share via