பேஸ்புக்கில் நட்பால் 14 லட்சத்தை பறிகொடுத்த நபர்

by Admin / 04-03-2022 11:32:53am
பேஸ்புக்கில் நட்பால் 14 லட்சத்தை பறிகொடுத்த நபர்

 
கோவை குனியமுத்துாரை சேர்ந்த 51 வயது நபர், ரியல் ஸ்டேட், ஆட்டோ கன்சல்டன்சி போன்ற வேலைகளை செய்கிறார். இவருக்கு, 'பேஸ்புக்'கில் நண்பராகும்படி பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. 

அந்த அழைப்பை தரகரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். 'சன்ஷைன்' என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணிடம், 'வாட்ஸ்அப்' மூலம் அடிக்கடி நட்பை வளர்த்தார் தரகர். 

இந்நிலையில் பிரிட்டன் பெண்மணி, 'நம் நட்புக்கு அடையாளமாக உனக்கு 60 ஆயிரம் பவுண்ட் பிரிட்டிஷ் கரன்சியை பார்சலில் அனுப்பி வைக்கிறேன்' என்று உருக்கமாக கூறியுள்ளார். 

'60 ஆயிரம் பவுண்ட் என்றால் எவ்வளவு' என்று கூகுளில் தேடிப்பார்த்த தரகர், 'இந்திய மதிப்பில் 61 லட்சம் ரூபாய்' என்று தெரிந்ததும், மகிழ்ச்சியில் துள்ளினார். 

ஒரு சில நாட்களிலேயே டில்லி விமான நிலையத்தில் இருந்து, அதிகாரி பேசுவதாக கூறி, போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் பார்சல் பிரிவில் இருந்து பேசுகிறேன். உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது.

அதற்கான கட்டணம், வரித்தொகை, பிரிட்டீஷ் கரன்சியை இந்திய கரன்சியாக மாற்ற, பரிமாற்றச் செலவுத்தொகை தர வேண்டும்' என்று கூறியிருக்கிறார். அதன்படி அவர் கூறிய வங்கி கணக்கில், 

இந்தாண்டு ஜன.6ம் தேதி முதல் 25ம் தேதி வரை வெவ்வேறு தவணைகளில், 14 லட்சம் ரூபாயை செலுத்தியிருக்கிறார். அப்படியும் அவருக்கு பணம் கிடைப்பதாக இல்லை. இதற்குள் பணம் வாங்கிய நபரோ, 'கரன்சி பரிமாற்றத்துக்கு இன்னும் செலவு ஆகும். பணம் செலுத்த தயாராக இருங்கள்' என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து உஷாரான அவர், விமான நிலைய அதிகாரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தார். உடனே எதிர்தரப்பு நபர் 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார். பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து பேசிய பிரிட்டன் பெண்மணியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தரகர், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via