மூன்றாம் பாலினத்த்ர்களுக்கு கொரோனா  நிவாரண நிதி உண்டா ? - தமிழக அரசு பரிசீலனை

by Editor / 27-05-2021 06:10:56pm
 மூன்றாம் பாலினத்த்ர்களுக்கு கொரோனா  நிவாரண நிதி உண்டா ? - தமிழக அரசு பரிசீலனை


 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4,000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
கொரோனா பேரிடர் காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் மருத்துவ தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்ய கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 50 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள போதும், 11,499 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. 2,541 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டைகள் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படவில்லை.
தற்போது 6,553 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை உள்ளது. ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.

 

Tags :

Share via