பாராலிம்பிக் தொடக்க விழா: மாரியப்பனுக்கு  பதிலாக தேக் சந்த் தேசிய கொடி ஏந்துகிறார்

by Editor / 24-08-2021 04:04:13pm
 பாராலிம்பிக் தொடக்க விழா: மாரியப்பனுக்கு  பதிலாக தேக் சந்த் தேசிய கொடி ஏந்துகிறார்



டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பில் தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில் தேக் சந்த் கொடி ஏந்தி செல்கிறார்.
உலகின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து  பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். வீரர்களின் உடல் பாதிப்புக்கு தகுந்தபடி வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து (5 பேர் அடங்கிய அணி), துப்பாக்கி சுடுதல், வலுதூக்குதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தேக்வாண்டோ உள்பட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெறுகிறது.
டோக்கியோவில் அரங்கேறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் (சிறிய வகை துடுப்புபடகு) ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.
ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியை போல் பாராஒலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கிறார்கள். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தொடக்க விழாவின் போது மூவர்ணக் கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த், இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரியப்பன் தங்கவேலுவுடன் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாரியப்பன் தங்கவேலுவுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தொடக்க விழாவில் பங்கேற்கவேண்டாம் என மாரியப்பனுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக தேக் சந்த், மூவர்ண கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை தவிர வினோத் குமார் (வட்டு எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள்.

 

Tags :

Share via