மெல்போர்னில் 2வது டி20: ஆஸி. 132/7 கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது : இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு வீண்

by Admin / 24-11-2018
மெல்போர்னில் 2வது டி20: ஆஸி. 132/7 கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது : இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு வீண்

மெல்போர்ன்: இந்திய அணியுடனான 2வது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியில் டி/எல் விதி கை கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

மெல்போர்னில் 2வது டி20: ஆஸி. 132/7 கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது : இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சு வீண்

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில், பயிற்சியின்போது காயம் அடைந்த பில்லி ஸ்டான்லேக்குக்கு பதிலாக நாதன் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டார். டார்சி ஷார்ட், கேப்டன் ஆரோன் பிஞ்ச் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். புவனெஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் 1 ரன் எடுக்க, அடுத்த பந்தை எதிர்கொண்ட பிஞ்ச் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். கிறிஸ் லின் 13, ஷார்ட் 14 ரன் எடுத்து கலீல் அகமது வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மேக்ஸ்வெல் 19 ரன் எடுத்து குருணல் பாண்டியா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி தலா 4 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட்டிய கோல்டர் நைல் 18 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குமார் வேகத்தில் மணிஷ் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது. மெக்டெர்மாட் 32 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஆண்ட்ரூ டை 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர், கலீல் தலா 2, பூம்ரா, குல்தீப், குருணல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நீண்ட நேர தாமதத்திற்குப் பின்னர், டி/எல் விதிப்படி இந்திய அணி 11 ஓவரில் 90 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், இந்த முடிவு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. ஆஸி. அணி தொடர்ந்து முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சிட்னியில் நாளை நடைபெறுகிறது.