ஐ–லீக் கால்பந்து: சென்னை சிட்டி வெற்றி

by Admin / 24-11-2018
ஐ–லீக் கால்பந்து: சென்னை சிட்டி வெற்றி

‘ஐ–லீக்’ கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 2–1 என்ற கோல் கணக்கில் மணிப்பூரின் ‘நெரோகா’ அணியை வீழ்த்தியது.

கோயம்புத்துாரில் நடந்த ‘ஐ–லீக்’ கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் சென்னை சிட்டி, மணிப்பூரின் ‘நெரோகா’ அணிகள் மோதின. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் சென்னை அணியின் எஸ்லாவா முதல் கோல் அடித்தார். இதற்கு ‘நெரோகா’ அணியினரால் பதிலடி தர முடியாததால், முதல் பாதி முடிவில் சென்னை அணி 1–0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த சென்னை அணிக்கு 52வது நிமிடத்தில் நெஸ்டர் கார்டில்லோ ஒரு கோலடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய ‘நெரோகா’ அணிக்கு 66வது நிமிடத்தில் சுபாஷ் சிங் ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார். கடைசி நிமிடம் வரை முயற்சித்த ‘நெரோகா’ அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2–1 என்ற கோல் கணக்கில், 5வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய 6 போட்டியில் 5 வெற்றி, ஒரு ’டிரா’ என, 17 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

Share via