திருக்கொட்டையூர் தேவார திருத்தல வரலாறும் அத்திருக்கோவிலின் திருப்பதிகமும்

by Editor / 18-05-2022 08:42:25am
திருக்கொட்டையூர் தேவார திருத்தல வரலாறும் அத்திருக்கோவிலின் திருப்பதிகமும்

திருக்கொட்டையூர் தேவார திருத்தல வரலாறும் அத்திருக்கோவிலின் திருப்பதிகமும்

திருக்கொட்டையூர் கோடிஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கோடீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கந்துக கிரீடாம்பாள், ஸ்ரீ பந்தாடு நாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை  திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

தல சிறப்பு

ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடி லிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்கு கொட்டைச் செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்ட முனிவர் என்று பெயர் பெற்றார். இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஊர் மக்களிடம் கோடீஸ்வரர் கோயில் என்று பெயர் சொல்லிக் கேட்டால் மக்கள் எளிதில் கோயிலைக் காட்டுகிறார்கள். இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார். பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.

தல அமைப்பு

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி காணப்படுகிறது. இத்தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம். 

திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது. இக்கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன், மண்டலம் பொருந்தி குடையுடன் அருமையாகக் காட்சி தருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தங்கள் காவிரியாறு, அமுதக் கிணறு எனகிற கோடி தீர்த்தம் என்பவை. அமுதக் கிணறு கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ளது. தல விருட்சமாக ஆமணக்கு கொட்டைச் செடி உள்ளது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது.

அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக் கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

காவிரி நதி திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் செல்கிறது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. அது கண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற இந்த ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். இந்த ஏரண்ட முனிவருக்கு கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் திருக்கொட்டையூர் மற்றும் திருவலஞ்சுழி (காவிரி தென்கரைத் தலம்) ஆகிய இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கும் பொதுவானது.

கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில், ஊர் உள்ளது.

🌺🌺🌺🌺திருநாவுக்கரசர் அருளியது இத்திருப்பதிகம்

பாடல் எண் : 01
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய் 
வருமணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் 
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
நிறம் வாய்ந்த மணி போன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும், தலைவனுமாகிய சிவபெருமான் நீலமணி போற்றிகழும் கரிய கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில் இருந்தவனும், பருத்த மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்றுபோல் காட்சியளிக்கும் மேலோனும், தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான்.

பாடல் எண் : 02
கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக் கங்கை செஞ்சடைமேல் ஏற்றான கண்டாய் 
அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்
மலைப் பண்டம் கொண்டு வரும்நீர்ப் பொன்னி
வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் 
குலைத்தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில்
கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான் மான்கன்றை ஏந்திய கரத்தனும், கலைகளைப் பயில்வோருக்கு ஞானக் கண்ணாய் விளங்குபவனும், அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும், அண்டச் சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும், மலைபடுபொருள்களை அடித்துக்கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான்.

பாடல் எண் : 03
செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய் 
சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் 
கொந்தார் பொழில் புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழ விளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும், சிவன் என்னும் நாமம் தனக்கே உரியவனும், தேவர்க்குத் தலைவனும், பந்தாடும் மெல்லிய விரல்களையுடைய பார்வதியைத் தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும், பால், தயிர், நெய், தேன் இவற்றில் ஆடப் பெறுபவனும், மந்தார மரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான்.

பாடல் எண் : 04
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் 
புள் பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்
எண் திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரை புரளும் காவிரி வாய்
வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் 
கொடியாடு நெடுமாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடைய புனிதனும், கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும், இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும், எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும், பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான்.

பாடல் எண் : 05
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் 
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய் 
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொள் மயில் தழை கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் 
கொக்கமரும் வயல் புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சங்கு மணியையும், பாம்பையும் இடையில் கட்டியவனாய், உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய், தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய், சதாசிவனாய், சலந்தரன் உடலைப் பிளந்தவனாய், நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான்.

பாடல் எண் : 06
சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய் சங்கரன் தான் கண்டாய்
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் 
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் 
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் 
கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
கொடிகள் கட்டப்பட்டு, மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும், சதாசிவனும், சங்கரனும், தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும், பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும், மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான்.

பாடல் எண் : 07
அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்
பணமணி மாநாகம் உடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் 
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் 
குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், எட்டுதற்கரியவனாய், குற்றமற்றவனாய், அழிவில்லாதவனாய், மேலுலகத்து உள்ளவனாய், படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய், பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய், ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய், மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான்.

பாடல் எண் : 08
விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான் கண்டாய் 
வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியதளுடையான் கண்டாய் 
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் 
குரவமரும் பொழில் புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான். மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும், வேதங்களால் போற்றப்படும் தலைவனும், புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் உடையாக உடுத்தியவனும், அழலாடுபவனும், அழகனும், தொடர்ந்து வரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகிய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான்.

பாடல் எண் : 09
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்
தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டு எட்டு இருங்கலையும் ஆனான் கண்டாய்
வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த குளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய், தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய், இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும். தன் பழைய சடையில் வைத்தவனாய், கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய், வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான்.

பாடல் எண் : 10
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் 
விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்
தண் தாமரையானும் மாலும் தேடத் 
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் 
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
ஓதிய நான்மறை ஆறங்க, வழி ஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், பகைவர் புரமூன்றையும் எரித்தவனும், வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும், குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும், வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள் மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும், தேவர்க்குத் தேவனும் ஆவான்.

 

Tags :

Share via