திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் பருவத ராஜகுலத்தினர்

by Editor / 03-12-2022 09:46:46pm
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் பருவத ராஜகுலத்தினர்

திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை பருவத ராஜகுலத்தினர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.திருவண்ணாமலை நகரில் மட்டும்  பருவத ராஜகுலத்தினர்   சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.

பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்தவர்கள்தான், தொன்றுதொட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, அவர்கள் மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று மறைந்துகொள்வார்கள். அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர். அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜனை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார்.

கடலுக்குள் விரைந்து சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீனமகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.

தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவத ராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா எனும் முழக்கத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார். அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

 

Tags :

Share via