இன்று மருத்துவர்கள் தினம் 

by Editor / 24-07-2021 03:32:45pm
இன்று மருத்துவர்கள் தினம் 

 

ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day)   கொண்டாடப்படுகிறது..
பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர்.


இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்  அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார்.


தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார்.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.


இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல்  டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக்  கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது.

 இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69  முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி  இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு  வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும்  அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

Tags :

Share via