ஆடி அமாவாசை சதுரகிரி மலையேற கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

by Editor / 02-08-2024 10:19:21am
ஆடி அமாவாசை சதுரகிரி மலையேற கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மாதத்தில் 8 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இந்தநிலையில் ஆடி அமாவாசை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் சுவாமிக்கு பல்வேறு வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும்.இதையொட்டி சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்துள்ளனர்.இதற்கிடையே சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இதய நோயாளிகள், சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கால் ஊனமுற்றோர்கள், அதிக வயதானவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் யாரும் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை எஸ்பி தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 துணை கண்காணிப்பாளர்கள், 30 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : ஆடி அமாவாசை: சதுரகிரி மலையேற கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

Share via