ஆனி திருமஞ்சனம் 2024 

by Editor / 12-07-2024 11:46:27pm
ஆனி திருமஞ்சனம் 2024 

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரம், திதி சிறப்புக்குரியதாகவும், வழிபாட்டிற்கு உரியதாகவும் அமையும். அப்படி வழிபாட்டிற்கு உரிய ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிவ வழிபாட்டிற்கு உரியதாகும். 

சிவ பெருமானின் ரூபமான ஆடல் அரசன் நடராஜரை வழிபட வேண்டிய நாளாகும். சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். சிதம்பரத்தில் நடக்கும் மிகவும் சிறப்புக்குரிய விழாவாக இது கருதப்படுகிறது.

ஆனி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆனி திருமஞ்சனம் ஆகும். ஆனி மாதம் உத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தையே ஆனி திருமஞ்சனம் என்கிறோம். விவசாயம் செழிப்பதற்காகவும், வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

சைவத்தில் கோவில் என்றால் அது தில்லை சிதம்பரத்தில் அமைந்துள்ளது நடராஜப் பெருமான் கோவிலையே குறிக்கும். பொதுவாக வருடத்தில் 6 முறை மட்டுமே அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இவற்றில் மார்கழி மாத திருவாதிரைக்கு பிறகு, சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது ஆனி திருமஞ்சனம் ஆகும். 

ஆனி திருமஞ்சன நாளிலேயே நடராஜப் பெருமான், சிவகாம சுந்தரி அம்மையுடன் ஆனந்த திருநடனம் ஆடி தேவர்களுக்கும், பதஞ்சலி முனிவருக்கும் திருக்காட்சி அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த நாளில் தேவர்கள், சிதம்பரம் நடராஜருக்கு பூஜைகள் செய்த வழிபடுவதாக ஐதீகம்.

அனைத்து சிவாலயங்களில் ஆனி திருமஞ்சனத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. 10 நாட்கள் விழா நடைபெறும் இந்த நாளில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருத்தேரோட்டம் நடத்தப்படும். இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. 

ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடக்கும் சிறப்பு அபிஷேகத்தால் சிவ பெறுமானின் மனம் மகிழ்ந்து, உலகம் செழிக்க செய்வதாக ஐதீகம். இந்த அபிஷேகத்தை காண்பவரின் வாழ்க்கையும் செழிக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு ஆனி திருமஞ்சனம் ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஜூலை 11ம் தேதி பகல் 01.47 துவங்கி, ஜூலை 12ம் தேதி மாலை 04.20 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. இந்த ஆண்டு ஆனி உத்திர நட்சத்திர நாளில் வளர்பிறை சஷ்டியும் இணைந்து வருவதால் இது சிவ பெருமான் மட்டுமின்றி முருகப் பெருமானையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் அதிகாலையில் எழுந்து காலையில் கோவில்களில் நடக்கும் நடராஜர் அபிஷேகத்தை தரிசனம் பண்ணலாம்.

கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டிலேயே சிவலிங்கம் இருந்தாலும் சுத்தமான நீர், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் எளிமையாக தண்ணீர் மட்டும் வைத்து அபிஷேகம் செய்து, வில்வ இலை படைத்து சிவனை வழிபடலாம். இப்படி வழிபடுவதால் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். துன்பங்கள் மாறி, இன்பமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. 

கோவிலில் நடராஜருக்கு நடக்கும் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும் சிவனின் அருளை பெற எளிய வழியாகும்.

 

Tags :

Share via