சபரிமலையில் மண்டல கால பூஜைக்கு முன்பு தயாராகிறது புதிய பஸ்மக்குளம் அமைக்கும் பணிதிவீரம்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் புனித நதியாக பம்பாவைக் கருதுவதுபோன்று, புனிதக் குளமாக பஸ்மக்குளத்தை பார்க்கின்றனர்.
சபரிமலை சன்னிதானத்தின் பின்பக்கமாக உள்ள பஸ்மக்குளத்தில் சுவாமிகள் நீராடுவதை முக்கிய சடங்காகக் கருதுகின்றனர். 18 முறை சபரிமலை சென்று வழிபட்டு குருசுவாமி என்ற ஸ்தானத்தை அடையும் பக்தர்கள் தென்னை மரக்கன்று ஒன்றையும் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள். அந்தத் தென்னை மரக்கன்றை பஸ்மக்குளத்தின் கரையில் நட்டு வைப்பார்கள்.
சபரிமலை ஐயப்ப சுவாமியின் திருக்குளமாக பக்தர்கள் கருதும் பஸ்மக்குளம் 1987 க்கு முன்பு கோயிலில் வடமேற்குப் பகுதியில் கும்ப ராசியில் அமைந்திருந்தது.
1987-ம் ஆண்டு அங்கிருந்த பஸ்மக்குளம் மூடப்பட்டு பக்தர்கள் நடந்துசெல்லும் மேல்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது பஸ்மக்குளத்தை ஒட்டிக்கிடந்த பாத்திரக்குளமும் மூடப்பட்டது. பாரம்பர்யம் மிக்க பஸ்மக்குளத்தை மூடுவதற்கு அந்தச் சமயத்தில் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து சபரிமலை சன்னிதானத்தின் பின்பகுதியில் தற்போது உள்ள பஸ்மக்குளம் உருவாக்கப்பட்டது.
பஸ்மக்குளத்தை ஒட்டி உயரமான பகுதிகளில் அமைந்துள்ள கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள், மாசடைந்த தண்ணீரால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. மேலும் பஸ்மக்குளமும், குளத்தை ஒட்டியுள்ள பகுதிகளும் மாசடைந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டன.
பஸ்மக்குளம் மிகவும் மோசமாக உள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பஸ்மக்குளத்தை மாற்றி அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. புதிய பஸ்மக்குளம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் விதமாக தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது.
வாஸ்து ஆராய்ச்சிமைய்யத் தலைவர் கே.முரளீதரன் உளிட்டோர் அடங்கிய குழுவினர் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி சபரிமலை சன்னிதானத்தின் வடகிழக்கு பகுதியில் மீனம் ராசியில் புதிய குளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
நடைப்பந்தலின் பின்புறம் உள்ள கொப்பரை களத்துக்கு அருகே புதிய பஸ்மக்குளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வி.எஸ்.பிரசாந்த் புதிய பஸ்மக்குளம் அமைக்கும் பணியைக் கல்போட்டுத் தொடங்கிவைத்தார். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இப்போது பஸ்மக்குளம் அமைந்துள்ள இடம் சரியானது அல்ல எனவும், தவறான இடத்தில் குளம் அமைந்திருந்ததால் அதை மாற்றவேண்டும் எனவும் பல தெய்வபிரசன்னங்களில் தெரிவிக்கப்பட்டது. புதிதாகக் குளம் அமையும் இடம் உத்தமமானது எனவும் வாஸ்து நிபுணர் கே.முரளீதரன் தெரிவித்தார்.
சபரிமலையில் இப்போது பஸ்மக்குளம் அமைய உள்ளது மூன்றாவது இடமாகும். வரும் மண்டல மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கும் முன்பு புதிய பஸ்மக்குளம் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் எனத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார். மேலும், கானன கணபதி (வன கணபதி) கோயில் அமைக்கவும் இடம் தேர்வுச்செய்யப்பட்டு அதற்கான பூஜைகளும் நடைபெற்றன.
Tags :