சிறையில் பயிற்சி எடுத்து இருசக்கரவாகனங்களை திருடிய திருடன் கைது
தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆர்எஸ்கேபி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் வெங்கடேசன்(29). இவரது வீடு, புளியங்குடி காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15ம்தேதி இரவு வீட்டு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் மர்மநபர், வெங்கடேசனின் பைக்கை ஸ்டாண்டை உடைத்து நூதன முறையில் திருடிச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சொக்கப்பட்டி இன்ஸ்பெக்டர் உடையார்சாமி, தலைமை காவலர் பால்ராஜ் மற்றும் காவலர்கள் செந்தில் செல்வம், மீனாட்சி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காட்சி அடிப்படையில் பைக் திருடனை தேடி வந்தனர். அப்போது பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர், அங்குள்ள பல்க்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை செய்து பைக் திருட்டில் ஈடுபட்ட மேலக்கடையநல்லூர் அப்பர்மடத்தெரு ராமானுஜம் என்பவரது மகன் முத்து மாரியப்பனை(26) கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ருசிகர தகவல் வெளியானது. பைக் திருட்டில் கைதான முத்து மாரியப்பனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு ஆகும். தற்போது மனைவி ஊரான மேலகடையநல்லூரில் வசித்து வருகிறார். பெயின்டிங் தொழிலாளியான இவர் ஏற்கனவே உண்டியல் திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். அப்போது சிறையில் குற்ற வாளிகளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பைக் திருட்டு தொழில் நுணுக்கம் குறித்து குற்றவாளிகளிடம் தகவல்களை பெற்றுள்ளார். பின்னர் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த முத்து மாரியப்பன், தினமும் ராஜபாளையத்திற்கு பஸ்சில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம்தேதி இரவு வேலை முடிந்து பஸ்சில் வந்த அவர் மதுபோதையில் புளியங்குடியிலேயே இறங்கி விட்டார். பின்னர் புளியங்குடி காவல் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெங்கடேசனின் பைக் அவரது கண்ணை உறுத்தி உள்ளது. இதையடுத்து சிறையில் நண்பர்களிடம் பெற்ற பைக் திருட்டு தொடர்பான நுணுக்கங்கள் பயன்படுத்தி பைக் ஸ்டாண்டை உடைத்து பைக்கை திருடிச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள பல்க்கிற்கு சென்று திருட்டு பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஊருக்கு திரும்பி உள்ளார். போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட முத்து மாரியப்பனை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார் பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags : சிறையில் பயிற்சி எடுத்து இருசக்கரவாகனங்களை திருடிய திருடன் கைது



















