பள்ளி மாணவி மர்ம மரணம்: விசாரணையை துவக்கிய சிபிசிஐடி அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியம் பாச்சலூர் வனப்பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 15.12.2021 அன்று பள்ளி இடைவேளையின் போது வெளியில் சென்ற ஐந்தாம் வகுப்பு மாணவி பிரித்திகா மர்மமான முறையில் பள்ளி சமையல் அறை அருகே தீயில் கருகியவாறு உயிரிழந்தார்.
இதையடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் கடந்த 23.12.2021 அன்று இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி தெற்கு மண்டல அதிகாரி முத்தரசி தலைமையில் மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், திண்டுக்கல் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சந்தான லட்சுமி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சமையலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.
அதேபோல் மாணவி பிரித்திகாவின் உறவினர்களை வரவழைத்து ஒவ்வொருவராக விசாரணையை மேற்கொண்டும் சிறுமி இறந்த இடத்தை வரைபடமாக எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :