கனவு இவை வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

by Writer / 18-08-2021 07:18:51pm
கனவு இவை வந்தால் என்ன பலன் கிடைக்கும்?


திருமணமாகாத பெண்களின் கனவில் வந்தால் விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நிகழும். திருமணமான பெண்கள் கனவில் வந்தால் பண வரவு வரும். அப்ஸ்ரஸ் எனப்படும் தேவலோகப் பெண்களை ஆண்கள் தங்களின் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் அவர்களுக்கு உண்டாகும். அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாகமிகவும் அழகான பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள். மணமாகாத இளம்பெண்களைக் கனவில் கனவு கண்டால், அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன்,பணக்காரனாக அதிக வசதிபடைத்தவராக இருப்பான் என கொள்ளலாம்.


அரச குடும்பத்தாருடன் பழகுவது போன்ற கனவு வந்தால், உங்களின் நண்பர்கள் மூலமாக பண உதவி கிடைக்கும். உங்களை விட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும். பிரதமர், ஜனாதிபதி போன்றோர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும் உண்டாகும்.


ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லை ஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும். நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும்.


ஒருவர் அரிசியைக் கனவில் கண்டாலோ அல்லது சந்தையில் வாங்கி வருவது போன்று கனவு கண்டாலோ அவர் செய்யும் தொழில் அபிவிருத்தி அடைந்து மிகுந்த தனலாபம் ஏற்படும். நமது கனவில் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அதே நேரம் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவு நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற பலன்களை தரும். கோயில் உற்சவம், தேரோட்டம் போன்ற கோயில் திருவிழாக்களைக் கனவில் கண்டால் விரைவில் உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் கேள்வியுற நேரிடலாம்.


நீங்கள் பலருடன் சேர்ந்து விருந்தில் பங்கேற்பது போல் கனவு கண்டால், பணியில் பதவி உயர்வு ஏற்படும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள் விருந்து சாப்பிட்டு மகிழ்வது போல் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பொருள்.


கனவில் எலும்பைக் காண்பது விசேஷம் என கூறப்படுகிறது. எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தர் ஆவார் என்று பொருள். ஒரு மனிதனின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும் என்று பொருள். நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே நிஜத்தில் நடக்கலாம். அல்லது நீங்கள் ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து அதனால் உயரதிகாரிகளின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும். வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், அவர்களின் தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம். முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியுமாம்.


நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள். ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய் தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இது பலரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும். தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அது நன்மைகளையே குறிப்பிடும் என எடுத்து கொள்ளலாம். சுக வாழ்க்கை உண்டாகும். உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது. உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு வந்தால், வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.


தன்னுடைய மனைவி இறந்து விட்டது போல் கனவு கண்டால் மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். ஒருவரின் இறந்து போன மனைவி மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவில் வந்தால் அவரின் வாழ்க்கை நிம்மதியாக அமையும். அதே நேரம் மறைந்த மனைவியின் முகம் சோகமாக இருப்பின் வாழ்க்கையில் புயல் வீசப்போகிறது என்று அர்த்தம்.
ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையே நடைபெறும். எண்ணெயை தனியாக அல்லது அதை தேய்த்துக் குளிப்பதாக கனவு ஏற்படக்கூடாது. அவ்வாறு கனவு வந்தால், வெகு விரைவில் அக்கனவை காண்பவர் நோயால் பாதிக்கக்கூடும். ஆனால் நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது போல கனவைக் கண்டால், அவரது நோய் விலகி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.


கனவில் காணும் விலங்குகளும் பட்சிகளும் விநோதமாக காட்சி தருவது உண்டு. திருமணமாகாத இளைஞன் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், அவன் வாழ்வில் பெரும் ஏமாற்றங்களுக்கு, விரக்திகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் எனலாம். திருமணமாகாத இளம் பெண் கனவில் கறுப்பு அன்னப் பறவை கனவில் வந்தால், வெகு விரைவில் அப்பெண் ஏதேனும் கவலைப்படக்கூடிய செய்தியைக் கேட்க நேரிடலாம். வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சியும், இன்பங்களும் நிறைந்ததாக இருக்கும்.


குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்னைகள் நம்மை விட்டு விலகும். வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால் நீண்ட நாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். செல்வமும் புகழும் கூடும். புதிய பதவி தேடி வரும்.
தொகுப்பு- சக்தி பிரியா 

 

Tags :

Share via