தொழிற்கல்வியில் 7.5% ஒதுக்கீடு மசோதா... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்...

by Admin / 26-08-2021 02:34:20pm
தொழிற்கல்வியில் 7.5% ஒதுக்கீடு மசோதா... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்...

பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

 தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதாவை, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து பேசிய அவர், கிராமப்புற மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 2006-ம் ஆண்டு தொழிற்கல்வி நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.

உயர் கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தனியார் கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலையில் அரசின் இந்த சட்ட முன்வடிவை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அரசு பள்ளியில் 40 சதவீதம் மாணவர்கள் படிப்பதாகவும், அதில் 3 புள்ளி 5 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வியில் சேரும் நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via