மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக தொடங்கிய புத்தகத் திருவிழா.

by Editor / 15-11-2024 09:25:59pm
மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக தொடங்கிய புத்தகத் திருவிழா.

இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தின் 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவானது நையாண்டி மேளம், தாரை தப்பட்டைகள் முழங்க கோலாகலமாக தொடங்கியது.

 இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகத் திருவிழாவானது தென்காசி நகரப் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த புத்தகத் திருவிழாவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த நிலையில், இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இன்று முதல் நடைபெற்று வரும் இந்த புத்தகத் திருவிழாவில், 50- மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சார்ந்த புத்தகங்களும், குறிப்பாக தென்காசியின் வரலாற்றை நினைவு கூறும் வகையில், பல்வேறு வரலாற்று புத்தகங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த புத்தகத் திருவிழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் பேசியதாவது:-
கலைஞர் வழியில் தமிழகம் முழுவதும் பல்வேறு நூலகங்களை நமது முதல்வர் கட்டி கொடுத்து பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறார்.

தமிழக மக்களின் வயிற்று பசியை போக்கி வரும் நமது தமிழக அரசு, அறிவு பசியை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.

நாகரீக உலகில் செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பார்ப்பதால் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதிலிருந்து குழந்தைகளை விடுவிக்கும் வகையில் இது போன்ற புத்தகத் திருவிழாவை அரசு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது என பேசினார்.

 

Tags : மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக தொடங்கிய புத்தகத் திருவிழா.

Share via