நடிகர் விஜய்! உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர்கள் போட்டி

by Editor / 19-09-2021 11:54:55am
நடிகர் விஜய்! உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர்கள் போட்டி

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களை களமிறக்கி தமது பலத்தை சோதனை செய்வதற்காக ஒரு பலப்பரீட்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags :

Share via