வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு.

by Editor / 13-01-2022 12:37:17am
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 வைகுண்ட ஏகாதசி தினம் அன்று வைஷ்ணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம்.

 அந்த வகையில் நாட்டில் உள்ள வைஷ்ணவ ஆலயங்களில் பக்தர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 சொர்க்கவாசல் திறந்தவுடன் முதலில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்க வாசலில் எழுந்தருளினார்.
 அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர்,முக்கிய பிரமுகர்கள், தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள்,  உயரதிகாரிகள் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.

 காலை 6 மணி முதல் 300 ரூபாய் தரிசனம் டிக்கட்டுகள், இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஆகியோர் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பத்து நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.

 பத்து நாட்களும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கிடைப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆறு லட்சம் லட்டுகள் எப்போதும் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும் 10 நாட்களும் ஒவ்வொரு நாளும் 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கும் வகையிலான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

 காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திருப்பதி மலையில் உள்ள அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து இலவச உணவு கிடைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 நாட்டில் மீண்டும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை உடன் கொண்டு வரும் பக்தர்கள்,அல்லது முப்பத்தி ஆறு மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனையில் காரோன நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்று உடன் கொண்டு வரும் பக்தர்கள் ஆகியோரை மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது.

 மேலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை உள்ளிட்ட கரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு.
 

Tags :

Share via