எளிமையாக நடந்த குடியாத்தம் சிரசுத் திருவிழா!!
தமிழகத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலுள்ள கெங்கையம்மன் சிரசு பெருவிழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் வைகாசி முதல்நாள் இந்த விழா வெகுவிமர்சையாக நடைபெறும். காப்புக் கட்டுதலுடன் தொடங்கி லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் சிரசு மிதந்துவரும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கும். ஊர்வலத்தைத் தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்பிறகு, கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்தக் காட்சியைக் காண அவ்வளவு சிறப்பாக இருக்கும். சிரசு விழாவையொட்டி, அன்று ஒரு நாள் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் விடப்படும். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலாலும், முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்படடன. இதனால், குடியாத்தம் சிரசுத் திருவிழா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எளிமையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட உற்சவரைத் தேரில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, சில அடி தூரம் வடம்பிடித்து இழுத்து மீண்டும் நிலைக்குக் கொண்டுச்சென்றனர். இதில், குறைந்தளவான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் கலந்து கொண்டனர். அவர்கள் தேர் மீது உப்பு, மிளகாய் தூவியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்கவும் அவர்கள் வீட்டிலிருந்தபடியே அம்மனைத் தரிசனம் செய்யவும் உள்ளூர் தொலைக்காட்சியிலும், யூடியூப், ஃபேஸ்புக் போனற சமூக ஊடகங்களிலும் சிரசு நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நள்ளிரவு 1 மணியிலிருந்து 2.30 மணிக்குள்ளாகப் பாரம்பர்ய ஆகம விதிகளின்படி அம்மனின் சிரசை கோயிலுக்குள்ளேயே உலா வரச்செய்து சண்டாளச்சியம்மன் உடலில் பொருத்தி கண் திறக்கச் செய்தனர். பின்னர், சிரசு பிரித்தெடுக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மிகவும் எளிமையான முறையில் திருவிழா நடந்து முடிந்தது. இதில், அதிகாரிகளின் மேற்பார்வையில் விழா அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Tags :