தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம் திருவெண்காடு!

by Admin / 24-07-2021 09:10:51am
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம் திருவெண்காடு!

தேவியின் திருத்தலங்கள் 25

'த்வதீயம் செளந்தர்யம் துஹினகிரி கன்யே துலயிதும்
கவீந்த்ரா கல்பந்தே கதமபி விரிஞ்சி ப்ரப்ருதயா:'
-செளந்தர்ய லஹரி
அம்பிகை நமக்கு வரங்களை அள்ளித் தர வெவ்வேறு இடங்களில் பல்வேறு ரூபங்களில் கோயில் கொண்டிருக்கிறாள். அதில் மிகவும் சிறப்புப் பெற்ற தலம் அன்னை பிரம்ம வித்யாம்பிகையாக வீற்றிருக்கும் திருவெண்காடு.


மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். புதன் பரிகாரத் தலம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய பழைமையான கோயில். காசியில் விஷ்ணு பாதம் உள்ளதுபோல், இங்கு ருத்ர பாதம் உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் "ஸ்வேதாரண்யம்' என்று குறிப்பிடப்படுகிறது.


பிரம்மாவின் மனதிலிருந்து உதித்தவர் மாதங்க முனிவர். அவரைத் தவம் செய்யும்படி பணிக்கிறார் பிரம்மா. அவரிடம் உபதேசம் பெற்று திருவெண்காட்டில் கடும் தவம் செய்த மாதங்கரின் தவத்தில் மகிழ்ந்து, அம்பிகை அவர் முன் தோன்றி "என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, "தேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்!' என்று கேட்கிறார்.
அதற்குச் சம்மதித்த அம்பிகை, ஓர் ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று மாதங்க தீர்த்தத்தில் நீலோத்பவ மலரில் சியாமளா தேவியாக அவதரித்தாள்.
இங்கு தவம் செய்து ஈசனை கணவனாக அடைந்தாள் அம்பிகை. இங்கு தன்னை வழிபட்ட பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை அம்பிகை உபதேசித்ததால் அம்பிகைக்கு "பிரம்ம வித்யாம்பிகை' என்று பெயர் வழங்குகிறது. கற்றலில் குறைபாடு, கல்வியறிவு, வித்தையில் தேர்ச்சி பெற அம்பிகையை வழிபடுகிறார்கள்.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் தனி உள் பிரகாரத்துடன் அம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


பிரம்ம வித்யாம்பிகை, துர்க்கை, காளி என்று அம்பிகைக்கு மூன்று சந்நிதிகள் உள்ளன. புதன் சந்நிதிக்கு அருகில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. துர்க்கை இங்கு மிக விசேஷமாக மேற்கு நோக்கி இருக்கிறாள். திருமணம் ஆகாதவர்கள் இந்த துர்க்கையை வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கிறது.


சம்பந்தர் இங்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகக் காட்சி அளித்ததால் அதில் கால் பதித்து நடக்க சம்பந்தர் தயங்குகிறார். அப்போது அம்பிகை அவரை இடுப்பில் தாங்கி வந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்று ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது.
அதேகோலத்தில் "பிள்ளை இடுக்கி அம்மன்' என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் காட்சி அளிக்கிறாள் பராசக்தி. இங்குள்ள காளி "சுவேதான காளி' என்று அழைக்கப்படுகிறாள்.


ஊரின் நடுநாயகமாக விளங்குகிறது கோயில். திருமதிலைச் சுற்றி மடவிளாகமும், தேரோடும் வீதிகளும் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது ஐந்துநிலை ராஜகோபுரம். மேற்கே ஐந்துநிலை கோபுரம், உட்பிரகாரத்தில் மூன்று நிலைக் கோபுரங்களும் உள்ளன.


மேற்கு வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது. புதனுக்குத் தனி சந்நிதி உள்ளது. கல்வி, கேள்வி, நரம்பு சம்பந்தமான நோய்கள் சரியாக புதனை வழிபட வேண்டும். நவகிரகங்களில் புத பகவான் கல்வி, அறிவு, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம் போன்ற கலைகள், மொழிகளில் புலமை, தொழிலில் மேன்மைகளைத் தரக்கூடியவர் .


அம்பாளுக்கு ஆடிப்பூரம் பத்து நாள் உற்சவம், நவராத்திரி விழா போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
மாதங்கரின் மகள் என்பதால் "மாதங்கி' என் அழைக்கப்படும் அன்னை எல்லையற்ற அழகுடன் காணப்படுகிறாள்.
மரகத நிறமுடைய ராஜ சியாமளா இவள்..!
"மாதா! மரகத சியாமா, மாதங்கி மதசாலினி குர்யாத் கடாக்ஷம்
கல்யாணீம் கடம்ப வன வாசிணீம்...
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பல நிலயே
ஜய சங்கீத ரசிகே ஜய லீலா சுகப்பிரியே!'
- என்கிறது அவளைப் பற்றிய ஸ்லோகம்.


இத்தலத்தின் புராணப் பெயர் ஆதி சிதம்பரம். ஈசன் ஆயிரத்து எட்டு விதமான தாண்டவம் புரிந்த தலம்.
சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள் என்று மூன்று தீர்த்தங்கள் இங்குள்ளன.
அன்னையின் நூற்றி எட்டு சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று என்பதால் அம்பிகையின் சந்நிதியில் அதிர்வுகள் அதிகம் காணப்படும். இந்திரனின் யானை ஐராவதம் வழிபட்ட தலம்.


ஒருவரின் ஜாதகத்தில் புதன் நீச்சம் பெற்று இருந்தால் இங்கு வந்து வழிபட்டு, அம்பிகையை மனமுருகி வேண்டினால் அனைத்து குறைகளையும் நீக்குவாள் அம்பிகை.
மனிதன் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஞானம், அறிவு, கலைகளில் மேன்மை இருந்தால்தான் வாழும் வாழ்க்கை இனிமையும், உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும்.
அத்தகைய ஞானத்தையும், வித்தையையும் அருள்பவள் அன்னை பிரம்ம வித்யாம்பிகை..!

 

Tags :

Share via