நெல்லை சிமென்ட் தொழிற்சாலையில் பைப் வெடிகுண்டுகள் சிக்கியது 2 பேர் கைது

by Editor / 24-06-2021 10:03:37am
நெல்லை சிமென்ட் தொழிற்சாலையில் பைப் வெடிகுண்டுகள் சிக்கியது 2 பேர் கைது

 நெல்லை அருகே தாழையூத்தில் செயல்படும் சிமென்ட் தொழிற்சாலைக்கு கடந்த 22ம்தேதி மாலை, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போனில் பேசிய மர்மநபர், தொழிற்சாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சில மணி நேரங்களில் வெடிக்கும் என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். தகவல் அறிந்து தாழையூத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அந்த தொழிற்சாலையில் சுமார் 3 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கடந்த 2 மாதங்களாக பயன்படுத்தப்படாத உற்பத்தி பிரிவு அறை லிப்ட் அருகே 2 பைப் வெடிகுண்டுகள் மற்றும் ரிமோட்டை கைப்பற்றினர். உடனடியாக அவற்றை மண், தண்ணீர் நிரப்பிய வாளியில் போட்டு பாதுகாப்பாக நெல்லை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மைதானத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் கைப்பற்றப்பட்ட பைப் வகை வெடிகுண்டுகள், சாதாரண வகையைச் சேர்ந்தது என்பதும், ஆலை அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே டம்மியாக தயாரிக்கப்பட்டு, ஆலையில் வைத்து சென்று இருப்பதும் தெரியவந்தது. இந்த ஆலையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் யாராவது இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க டிஎஸ்பி அர்ச்சனா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி மேல தாழையூத்தை சேர்ந்த ஆறுமுகம் (29), பேட்டை பகுதியை சேர்ந்த சலீம் (25) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள், ஆலையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றியதும் தெரிய வந்தது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர். 

 

Tags :

Share via