அருள்மிகு கொண்டத்து காளியம்மன்திருக்கோவில்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன்திருக்கோவில்
பெருமாநல்லூர், திருப்பூர் மாவட்டம்.
மன்னர் காலத்திற்கு பின்னர், மக்கள் தொடர்ந்து கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்தனர். அப்போது ஆங்கிலேயர்கள், குண்டம் இறங்கும் திருவிழாவிற்கு தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி பக்தர்கள் குண்டம் இறங்கச் சென்றபோது, அதில் அரக்கை ஊற்றி பக்தர்கள் இறங்கமுடியாதபடி செய்தார்கள்.
இதனால் மனம் கலங்கிய பக்தர்கள் வருந்தியபடியே அம்பாளைத் துதித்து, பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென பன்றி புகுந்து குண்டத்தில் இறங்கி ஓடியதை கண்ட வெள்ளைக்காரத் துறைக்கு கண்பார்வை மங்கியது. பன்றி வடிவில் வந்தது அம்பிகை என்பதை உணர்ந்த அவர், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதித்தார். அதன்பின், அவருக்கு பார்வை கிடைத்தது.
இத்தல விநாயகர் பால விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சப்தகன்னியர், குதிரைகளுடன் முனியப்பன், கருப்பராயர் ஆகியோர் அருள்புரிகின்றனர்.
அம்பாள் சன்னதிக்கு இடப்புறம் முத்துக்குமரன், தனது கழுத்தில் சொருகிய வாளை கையில் பிடித்தபடி, அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத இத்தல சிறப்பாகும்.
குடும்ப பிரச்சனை தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
குண்டம் இறங்குதல், அக்னிச்சட்டி, பால்குடம், அங்கபிரதட்சணம், குண்டத்தில் உப்பு, மிளகு, கரும்பு போடுதல் போன்றவற்றை பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக செய்கின்றனர். தோல் நோய் தீர்ந்திட காளிக்குரிய சிங்க வாகனத்தின் மீது வெற்றிலை, பாக்கு வைத்து வணங்கப்படுகிறது.
Tags :