கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டது.கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் இன்றி தவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து அங்குள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து மீண்டும் வலசை இடம் பெயர்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பறவைகளின் வரத்து மிகவும் தாமதமானது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூந்தன் குளத்திற்கு வர துவங்கும் வெளிநாட்டு பறவைகள் ஜூன், ஜூலை வரையிலும் அங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த நிலையில் இந்த ஆண்டு பறவைகளின் வலசை கால தாமதம் ஆனதால் அவற்றின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துள்ளது. டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் கூந்தங்குளம் உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியது. அதை முறையாக சீரமைக்காததால் போதிய அளவு தண்ணீர் இருப்பு வைக்க முடியாமல் அப்பகுதி விவசாயிகள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் ஜனவரியில் மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து குளங்களுக்கு விடப்பட்டது.
இருப்பினும் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு மணிமுத்தாறு பாசன தண்ணீரில் வழக்கமாக அளிக்கப்படும் முன்னுரிமை இந்த ஆண்டு அளிக்கப் படவில்லை. இதனால் அப்பகுதியினர் கூடுதல் தண்ணீர் திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்தை பலமுறை அணுகிய போதும் நடவடிக்கை எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்னும் மூன்று மாத காலத்திற்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது அங்கு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பறவைகள் அங்கிருந்து வெளியேறி வருவதால் குளத்தில் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் அங்கு இருக்கும் ஒரு சில பறவைகளும் கூடுகள் கட்டாமல் பெயரளவுக்கு தங்கி உள்ளன. இதனால் கூந்தன் குளத்தில் ஆர்ப்பரிக்கும் பறவைகள் கூட்டத்தைக் காண வரும் சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் வலசை பறவைகள், கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் இன்றி பரிதவித்து வருகின்றன.
Tags :