நடிகைகளை தவறாக விமர்சித்ததற்காக டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக நடிகை ராதிகா உள்ளிட்ட சிலர் கூறினர். இதுதொடர்பாக, யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓ.கே சொல்லிவிட்டு, 30 ஆண்டுகளுக்கு பிறகு புகாரளிப்பதாக நடிகைகளை விமர்சித்தார்.
மேலும் நடிகைகள் சிலரது பெயரையும் குறிப்பிட்டு பேசியிருந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவரான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில், ஆன்லைன் வழியாக புகாரளித்தார்.ரோகிணியின் புகாரையடுத்து காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், டாக்டர் காந்தராஜ் “யூடியூப் சேனலுக்கு திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி, பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல.. இருப்பினும், இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.. உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Tags : நடிகைகளை தவறாக விமர்சித்ததற்காக டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.