ஹெலிகாப்டர் மூலம் ஏழுமலையானை  தரிசிக்க கட்டணம் ரூ.1,11,116

by Editor / 29-09-2021 05:27:31pm
ஹெலிகாப்டர் மூலம் ஏழுமலையானை  தரிசிக்க கட்டணம் ரூ.1,11,116


திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்று விஐபி பிரேக் தரிசனம் செய்வித்து, 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து திரும்பவும் ஊருக்கு அழைத்துச் செல்ல ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 116 கட்டணம் என சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


உலகின் பணக்கார கடவுளாககருதப்படும் திருப்பதி ஏழுமலையானின் சில நாழிகை தரிசனத்திற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில், கார்,பஸ் போன்ற பல்வேறு வாகனங்களில் திருப்பதி வந்து சுவாமியை தரிசித்து செல்வர். அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடக மாநிலங்களில் இருந்து பைக்கில் கூட திருப்பதிக்கு வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

தற்போது, இவையெல்லாவற்றையும் தாண்டி வாசவி யாத்ரா அண்ட் டூர்ஸ் எனும் பெயரில் சிவக்குமார் என்பவர் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான விளம்பரம் செய்துள்ளார். அதில், ஒரு பக்தர் ரூ.1,11,116 செலுத்தினால், சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்வோம். அங்கு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் மற்றும் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதன் பின்னர், மீண்டும் அவரவர் ஊர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு சென்று விடப்படும் என விளம்பரப்படுத்தி உள்ளார்.

இதனை அறிந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. விஐபி பிரேக்தரிசனத்தை நேரடியாக விஐபி-களுக்கும், அல்லது அவர்கள்சிபாரிசு கடிதம் கொடுத்தனுப்பினால் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தனியார்களுக்கோ, அல்லது சுற்றுலா நிறுவனங்களுக்கோ விஐபி பிரேக்தரிசன டிக்கெட் வழங்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ் தானம், ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும், ரூ.10,500 செலுத்தி இந்த டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இது ஆன் லைன் மூலமாக கூட கிடைக்கிறது. ரூ.10,000 நன்கொடையாகவும், ரூ.500 டிக்கெட் விலை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்பாடு களை தேவஸ்தானமே செய்துகொடுக்கிறது.

 

Tags :

Share via