பள்ளிகள் திறப்பது என்பது காலத்தின் கட்டாயம் : நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

by Editor / 29-09-2021 05:51:54pm
பள்ளிகள் திறப்பது என்பது காலத்தின் கட்டாயம் : நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கேடிசி நகர் பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து திறந்த வாகனத்தில் நின்றவாறு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் நேரடியாகக் கிராமப்புற மக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் கிடைத்திட பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி படை பலம் பண பலத்தைத் தாண்டி நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும் தேர்தலுக்குப் பின்பு ஒரு பேச்சும்தான் திமுகவின் நடவடிக்கை அனைவருக்கும் தெரிந்ததுதான்.உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பளிக்க வில்லை என ஒருவர் முதல்வர் வீட்டு முன்பு தீக்குளித்த சம்பவமும் நடந்தேறி உள்ளது. நாம்தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியினர் அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்ப்பந்தித்து உள்ளனர்.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு என்பது காலத்தின் கட்டாயம். பள்ளி திறப்பைப் பொறுத்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.


தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் திறக்கும் போது கோவிலுக்கு வரும் பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தியிருக்கும் நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு மூடியிருக்கும் கோவிலைத் திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஒரு சாராருக்கு மட்டும் அரசு ஆதரவாகச் செயல்படக் கூடாது. திமுக பிரச்சாரம் இனியும் மக்களிடம் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via