காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு  முழுநேர தலைவர் நியமனம்

by Editor / 29-09-2021 05:56:44pm
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு  முழுநேர தலைவர் நியமனம்


காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைவராக உள்ள சவுமித்ரா குமார் ஹல்தார் என்ற எஸ்.கே. ஹல்தார் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.அதன்படி, அக்குழுக்கள் அமைக்கப்பட்டன.


2018-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த 3 ஆண்டுகளில் அதற்கென தனிப்பட்ட முழுநேர தலைவர் நியமிக்கப்படவில்லை. மத்திய நீர்வள ஆணைய தலைவரே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.


முழுநேர தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது இந்த கோரிக்கையை வலியுறுத்திதாக தெரிவித்தார். இதற்காக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.


இந்த நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய நீர்வள ஆணைய தலைவராக உள்ள சவுமித்ரா குமார் ஹல்தார் என்ற எஸ்.கே.ஹல்தார் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.முழுநேர தலைவரின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை செல்லுபடி ஆகும்.எஸ்.கே.ஹல்தாரின் பணிக்காலம் வருகிற நவம்பர் 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இருப்பினும் அதன்பிறகு அவர் ஒப்பந்த முறையில் முழுநேர தலைவராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கு,  மத்திய மந்திரி சபையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via