களக்காடு புலிகள் காப்பக பகுதியில் காட்டு தீ

by Editor / 06-07-2021 08:25:47am
களக்காடு புலிகள் காப்பக பகுதியில் காட்டு தீ

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் களக்காடு அமைந்துள்ளது. இதனையொட்டிய வனப்பகுதி களக்காடு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக செயல்பட்டு வருகிறது. இங்கு மான், மிளா, காட்டு எருமை, யானை , சிறுத்தை , சிங்கவால்குரங்கு என ஏராளமான அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.  இந்நிலையில் களக்காடு வனசரகம் கருங்கல் கசம், பகுதியில் திடீர் என காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மள, மள வென மற்ற பகுதிகளுக்கும் பரவி பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில், வனத்துறையினர் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் ஒரு கட்டமாக  வனசரகர் பாலாஜி தலைமையில், களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் உள்பட 50 பேர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தீ பற்றி எரியும் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே போல் அம்பாசமுத்திரம் , பாபநாசம், கடையம் வன சரகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மரக்கொப்புகளை வைத்து அடித்தும், மண், கற்களை அள்ளிப் போட்டும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் விளைவாக இன்று காட்டுத் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

 

Tags :

Share via