1500 வருட பழமையான திருப்பூர் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில்
சுமார் 1500 வருட பழமையான இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டமலை என்ற சிற்றூரில் உள்ளது. முதலில் சிவன் கோயிலாக இருந்த இந்தத்தலம் 1949 ம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி மூலவராகவும் மற்றும் வள்ளி தெய்வானை திருமேனிகளை தனிச் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கல்வெட்டுக்கள் மூலமாகஅறிய வருகிறோம். கொங்கு மண்டலத்தில் உள்ள முருகன் வீற்றிருக்கும் இந்த தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முருகன் அருகே ஆதிசேஷன் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வேறு எந்த முருகன் கோயிலிலும் காண முடியாத அம்சம் ஆகும். இந்தத் தலத்தில் ஒரு பெரிய நாகம் ஒன்று வலம் வந்து முருகனை வழிபட்டதால் இந்த தலத்து முருகனுக்கு அருகே சிலை அமைத்ததாக கூறுகின்றனர்.
இன்றும் நாகம் ஒன்று கோவிலுக்குள் வருவதாகவும் அது பக்தர்கள் யாரையும் அதைத் தொந்தரவு செய்வதில்லை என்பதையும் இங்கு உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
மகா மண்டபத்தின் மையத்தில் தாமரை மலர்ந்து விரிந்த நிலையில் உள்ளது போல் மகாபீடம் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று இந்தப் பீடத்தின் மீது தீர்த்தம் நிரம்பிய கலசம் வைக்கப்பட்டு சுவாமி ஆவாகனம் செய்து ஹோம பூஜைகள் நிறைவடைந்த பின்பு சுவாமிக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்விடம் தெய்வாம்சம் பொருந்திய சக்தி வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. கோவிலின் தென்மேற்கு பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. ஆதிகாலத்தில் சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் இங்கு தான் நடந்தது என்று கூறப்படுகிறது. தற்போது கோவிலிலேயே நடத்தப்படுகிறது. அடிவாரத்தில் சரவண தீர்த்தம் என்ற சுனை உள்ளது. இதில் ஊறும் நீர் சுவையாகவும் மிகவும் இனிமையாகவும் இருக்கிறது. இடிவிழுந்து உண்டான ஊற்று ஆனதால் இதன் அடி நீரடி நெருக்கடி என்று கூறுகின்றனர். இந்த தலத்தில் சிவ ஆகமப்படி காலசந்தி மற்றும் சாயரட்சை என இரு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இந்தத் திருக்கோவிலுக்கு வந்து, செவ்வாய்க்கிழமை அன்று அபிஷேகம் செய்து வழிபட அனைத்து தோஷ நிவர்த்தியும் நல்ல ஆரோக்கியமும் நினைத்த காரியங்கள் நிறைவேறிடும் என்பதுவும் ஐதீகம்.
இங்கு முக்கிய திருவிழாக்கள் ஆக சஷ்டியும் கார்த்திகை மாத விழாக்கள், அபிஷேக பூஜைகளுடன் காலை வேளையில் நடைபெறுகின்றன. வருட விழாக்கள் வைகாசி விசாகம், தைப்பூசம், சூரசம்ஹாரம், மற்றும் பங்குனி உத்திரம் ஆகும். இதில் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
கொடியேற்றத்துடன் துவங்கி, திருவீதி உலா உட்பிரகாரத்தில் திருக்கல்யாணம் திருத்தேர் மலையை சுற்றி நடைபெறுகிறது. கொடுமுடியில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து வந்து அதில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். திருத்தேரில் மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக அசைந்து அசைந்து ஆடி வரும் அழகை கண்கொள்ளா காட்சி எனக் கூறப்படுகிறது. இந்த தேரோட்டம் மலையை சுற்றி வலம் வரும். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெறுகின்றனர்.
இந்த வெளிப்புற சுவற்றில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டு உள்ளதால் இது சோழ மன்னரின் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொங்குநாட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்ட போது, இத்தலத்திற்கும் வந்துள்ளார். அதனை நினைவு கூறும் வகையில் அவரது சிலை வாத்திய மண்டபத் தூணில் வடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய குன்றின் மீது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவிலை அடைய சுமார் 100 படிகளைக் கொண்ட மலைப் பாதையை கடக்க வேண்டியுள்ளது. வாகனங்கள் மேலே செல்ல மலையில் பாதை போடப்பட்டுள்ளது. மலைப்பாதையில் மகாகணபதி மற்றும் இடும்பன் சன்னதிகள் உள்ளன.
இந்த திருக்கோயில் தலவரலாறு பற்றி அறியும் பொழுது குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவதற்கு ஏற்ப இந்த மலை கோவில் முருகன் எழுந்தருளி முத்துக்குமாரசாமி என்னும் திருநாமத்தில் அருளாட்சி புரிகின்றார் என்று கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து பழனி செல்லும் வழியில் உள்ளது. இந்த பகுதியில் சின்ன காடையூர் என்று அழைக்கப்பட்டது. இம்மலைக்கு அருகில் வசித்த கொங்கண சித்தர் வழிபட்ட தலம் என்பதால் மேற்கொண்டதால் கொங்கணகிரி எனவும் பின் வட்டமலை எனவும் தற்போது வழங்கப்படுகிறது. கருவறையில் அழகுடன் எழிலாக, சதுர்புஜ நாயகனாக, திரிசூலம், சட்ட கோணம், அங்குசம், மற்றும் அபயஹஸ்த முத்திரை தாங்கி நின்ற கோலத்தில் முத்துக்குமாரசாமி ஆக முருகன் அருள் பாலிக்கின்றார். தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையும் இந்த திருக்கோவில் திறந்திருக்கும்.
Tags :