மத்திய அரசு நடவடிக்கை வெங்காயம் விலை உயர்வை தடுக்க
கடந்த சில வாரங்களாக வெங்காயம் விலை மெதுவாக உயர்ந்து வருகிறது. டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் சில்லரை விற்பனையில் வெங்காயம் விலை கிலோ ரூ.40 ஆக உள்ளது.
மும்பையில் ரூ.39 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.43 ஆகவும் வெங்காயம் விற்கப்படுகிறது. அகில இந்திய அளவிலான சராசரி விலை கடந்த ஆண்டை விட 22.36 சதவீதம் குறைவாக உள்ளது.
கரீப் (கோடை காலம்) பருவ வெங்காயம், சீராக சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. ரபி (குளிர்காலம்) பருவ வெங்காயம், மார்ச் மாதத்தில் இருந்து வரத்தொடங்கும்.
இருப்பினும், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விலையை ஸ்திரப்படுத்துவதற்காக தனது கையிருப்பில் இருந்து வெங்காயத்தை விடுவிக்க தொடங்கி உள்ளது.
விலை உயர்ந்து வரும் மாநிலங்களுக்கு வெங்காயத்தை அனுப்பி வைத்து வருகிறது.
அந்த மாநிலங்களுக்கு கிலோ ரூ.21 என்ற மலிவு விலையில் வழங்குகிறது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள லசல்கோன், பிம்பல்கோன் ஆகிய மொத்த விலை வெங்காய மண்டிகளுக்கும் வெங்காயத்தை விடுவித்து வருகிறது.
இதன்மூலம் வரத்து அதிகரித்து, வெங்காயம் விலை கட்டுக்குள் வரும் என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் கூறியுள்ளது.
தக்காளியை பொறுத்தவரை, அதன் விலை கடந்த ஒரு மாதமாக சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அகில இந்திய சராசரி விலை கிலோ ரூ.26.69 ஆக உள்ளது. இது கடந்த மாதத்தை விட குறைவு.
தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், வரும் வாரங்களில் அதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த விலை ஸ்திரப்படுத்தும் நிதியம் உருவாக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Tags :