இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பவை என்ன?
சக்தி என்றால் ஆற்றல், வல்லமை, திறமை என்று பொருள். உயிர்களுக்கு ஆத்மாக்களுக்கு மூன்று விதமான சக்திகள் ஆற்றல்கள் உள்ளன. ஆத்மா இயங்க வேண்டும் என்றால் செயல்பட வேண்டும் என்றால் நல்லதோ கெட்டதோ பெரியதோ சிறியதோ சாதகமோ பாதகமோ எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் என்றால் இச்சா சக்தி (ஆசை விருப்பம் எண்ணம் ), கிரியா சக்தி (செய்கைத் திறன்), ஞான சக்தி ( செய்யும் முறை அறிவாற்றல்) ஆகியவை இயங்க வேண்டும்.
இரும்பில் துரு பிடித்தால், செம்பில் களிம்பு ஏறினால் அவை பயன்படாமல் பாழடைந்து போவது போல் ஆத்மாக்களை ஆணவம் பிடிக்கும்போது அவை செயல்பட முடியாமல் பாழாய்க் கிடக்கின்றன. ஆத்மாக்களின் மூன்று சக்திகளையும் ஆணவம் முடக்கி வைக்கின்றது. ஆணவத்தின் பிடியிலிருந்து தளர்த்தி உயிர்களின் இச்சை கிரியை ஞான சக்திகளை யெல்லாம் இயக்குவதற்காக ஐந்து தொழில் புரியும் பரமேசுவரன் ஆத்மாக்களுக்கு உடலையும் உலகத்தையும் அளிக்கின்றார். இதுவே படைத்தல் தொழில்.
புல்லாகி ---- தேவராய்(திருவாசகம்)
எழு பிறப்பும் தீயவை தீண்டா ( திருக்குறள்.)
அவர்க்கே எழு பிறப்பும் ஆளாவோம் ( காரைக்கால் அம்மையார்)
என அரி அயன் ருத்திரன் ஆகிய மும்மூர்த்தி பராசக்தி லட்சுமி சரஸ்வதி ஆகிய அம்மன்கள் முதல் புல் வரையிலான 84 லட்சம் பிறவிகளில் ஆத்மாக்கள் பிறக்கின்றன. ஒரு ஆத்மா அதிக பட்சமாக ஏழு முறை மனிதராகப் பிறக்கிறது. அதாவது ஒரு ஆத்மாவுக்கு மனிதப் பிறவியின் பங்கு ஏழு . மிருகப் பிறவியிலிருந்து முதல் முறை மனிதராய்ப் பிறப்பவர்க்கும் பல முறை ஏழாம் முறை மனிதராய்ப் பிறப்பவர்க்கும் பண்பு பழக்க வழக்கம் குணம் ஞானம் எல்லாவற்றிலும் வித்தியாசம் உண்டு. இவையே மேன்மக்கள் கீழ்மக்கள், நல்லவர் தீயவர் என்ற வேறுபாட்டை உண்டாக்குகின்றன.
தெய்வம் முதல் புல் வரை எல்லோரையும் படைக்கும் எல்லாம் கடந்த எல்லாம் வல்ல கடவுள் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றுதான் ஆணாகவும் பெண்ணாகவும் இருபால் அம்மையப்பனாகவும் உள்ளது. இறைவனாகவும் இறைவியாகவும் உள்ளது.
ஒருவன் என்னும் ஒருவன் காண்க* (திருவாசகம்)
ஒன்று அவன் தானே* (திருமந்திரம்)
ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன்* (நம்மாழ்வார்)
என்று அந்தக் கடவுளை நேரில் கண்டு வாழ்ந்த அருளாளர் அருளிய தெய்வீகத் திருமுறைகளும் ஆன்மீக இலக்கியங்களும் காட்டுகின்றன. உயிர்களுக்கு உண்டாகும் பசு ஞானம், பாச ஞானம், பதி ஞானம் என்ற மூன்று வகை ஞானங்களில் சிவ ஞானம் எனப்படும் பதி ஞானமே பிறப்பு நீக்கி ஆத்மாவைத் தூய்மையாக்கும் . மற்ற இரண்டு ஞானமும் மீண்டும் பிறவியில் தள்ளும்.
இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி ஆகிய உயிர்களது மூன்று ஆற்றலை மூன்று தெய்வங்கள் என்று கூறுகின்றனர். முருகனுக்கு இரண்டு தேவியரும் வேலும் இச்சா கிரியா ஞான சக்திகளாகும்.
Tags :