சங்கடஹர சதுர்த்தி தோன்றிய கதை
சங்கடஹர சதுர்த்தி தோன்றிய கதையும், பிள்ளையார் எறும்பு என அழைக்கப்படுவதற்கான காரணமும்: இன்று மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி: மகாசங்கடஹரசதுர்த்தி அன்று விநாயகரைக் கட்டாயம் வழிபட வேண்டும். ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம். அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். புராணக்கதை: அன்று கிருஷ்ணபட்ச பஞ்சமி . சிவ கைலாயத்தில் அம்மையும் அப்பனும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு விளையாட்டு ஆசை ஏற்பட்டது. 'தினமும் நாம் அனைவருக்கும் உணவு தருகின்றோம். ஒரு நாள் கொடுக்காவிடில் என்ன ஆகும். அவை இன்று பட்டினியால் கிடக்கட்டும் . நாளை பார்ப்போம்' என எண்ணியவள் தனது அருகில் சென்று கொண்டு இருந்த சிறிய கருப்பு நிறத்தில் இருந்த எறும்புகளை பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டாள். மறுநாள் அதைத் திறந்து பார்த்தாள். அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன. அதை விட ஆச்சர்யமாக எல்லாவற்றின் வாயிலும் சிறிது வெள்ளையாக உணவு ஒட்டிக் கொண்டு இருந்தது. பார்வதிக்கு ஒரே குழப்பம். அவைகளுக்கு எங்கிருந்து உணவு கிடைத்தது? தான் தவறு செய்து விட்டோம் எனவும் அனாவசியமாக ஜீவராசிக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் தேட தானும் பட்டினி இருந்து தபஸ் செய்யக் கிளம்பியபோது எதிரில் பிள்ளையார் வந்து கொண்டு இருந்தார். அவர் வயிறு ஒட்டி உலர்ந்து வாடிப் போய் இருந்தது. ஒரே நாளில் அவர் இளைத்து இருப்பதைக் பார்த்த பார்வதி கவலைப்பட்டு அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க பிள்ளையார் கூறினார். அம்மா, நீங்கள் அந்த சிறு எறும்புகளைப் பட்டினி போட்டுவிட்டு எனக்கு மோதகமும் அப்பமும் வயிறு நிறையத் தந்தீர்கள். ஆனால் அந்த சிறு ஜீவராசிகள் பட்டினியினால் வாடுவதைப் பொறுக்க முடியாமல் நான் எனக்கு நீங்கள் தந்த உணவை சாப்பிடாமல் அவைகளுக்குக் கொடுத்து விட்டேன்" என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்து போன பார்வதி தனது தவறை உணர்ந்தாள். ஆனாலும் அந்த சம்பவம் மூலம் இந்த உலகுக்கு ஒரு சேதி கிடைத்ததே என எண்ணி தனது பிள்ளைக்கு ஒரு ஆசிர்வாதம் தந்தாள். "இன்று இந்த அறிய செயலை நீ செய்ததினால் இன்று முதல், அதாவது ஒவ்வொரு கிருஷ்ணபட்ஷ சதுர்த்தியிலும் தமது சங்கடங்களை விலக்கிக் கொள்ளும் நாளாக பக்தர்கள் உனக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். அதுவே சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படும். அன்று உன்னை பூஜிப்பவர்களுக்கு பெரும் நன்மை உண்டாகும் " ஆகவேதான் அந்த கருப்பு எறும்புகளுக்கு பிள்ளையார் எறும்பு என்ற பெயரும் ஏற்பட்டது.
Tags :