முதுகு வலி நீங்க செய்ய வேண்டிய முத்திரை - ஆசனம்

by Staff / 21-03-2022 01:15:33pm
முதுகு வலி நீங்க செய்ய வேண்டிய முத்திரை - ஆசனம்

நேயர்களே கீழே குறிப்பிட்ட முத்திரை, யோகாசனம், தியானம் இவற்றை தினமும் பயின்று கழுத்து, முதுகு, நடு முதுகு, அடி முதுகு, இடுப்பு வலி வராமல் வாழுங்கள்.

அனுசாசன முத்திரை, புஜங்காசனம்

முதுகு வலி நீங்க அனுசாசன முத்திரை: விரிப்பில் நேராக அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் சுண்டு விரல் மோதிரவிரல், நடுவிரலை உள்ளங்கையில் மடக்கி கட்டை விரலை மோதிர விரலின் வெளிப்பகுதியில் படும்படி வைக்கவும். ஆள்காட்டி விரலை நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளையும் தோல்பட்டை அருகில் வைக்கவும். ஆள்காட்டி விரல் வெளிப்புறமாக இருக்க வேண்டும். காலை மாலை சாப்பிடும் முன் இரண்டு வினாடிகள் இருக்கவும்.

புஜங்காசனம்: விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். இரு கைகளையும் இதயம் பக்கத்தில் வைத்து மூச்சை இழுத்து கொண்டே மெதுவாக பின்புறமாக வளையவும். இடுப்பு வரை தரையில் இருக்க வேண்டும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையில் படுக்கவும். இரண்டு முறைகள் செய்யவும்.

 குறிப்பு: இந்த ஆசனம், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், எலும்பு வீக்கம், வரிசை அகன்று உள்ளவர்கள் செய்ய வேண்டாம். தகுந்த யோகா வல்லுனரின் நேரடிப் பார்வையில் செய்யவும்.

அர்த்த ஹாலாசனம்:விரிப்பில் நேராகப் படுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் விரல்கள் தரையில் படும்படி வைக்கவும். கைகளை நன்கு அழுத்தி மூச்சை இழுத்துக்கொண்டே வலது காலை மட்டும் ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு காலை கீழே போடவும். பின் இடது காலை ஒரு அடி உயர்த்தவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு காலை கீழே போடவும். இதேபோல் இரண்டு முறைகள் பயிற்சி செய்யவும்.

அமரும் நிலை:எப்பொழுதும் நிமிர்ந்து உட்காரக் கற்றுக்கொள்ளுங்கள். சாப்பிடும் பொழுது, வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 

Tags :

Share via