இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

by Staff / 28-03-2022 11:05:12am
 இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

கர்நாடகாவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். 

இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். 

இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கர்நாடகாவில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 11-ம் தேதி வரை இந்த பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். 

 

Tags :

Share via