குல தெய்வமும் - சில விளக்கங்கள்!

by Editor / 24-07-2021 10:13:43am
குல தெய்வமும் - சில விளக்கங்கள்!

குலதெய்வங்கள் பட்டியலைப் பார்த்தால் பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு பகவான், மற்றும் பார்வதி தேவி போன்றவர்கள் அவரவர்கள் தோற்றத்தில் குலதெய்வங்களாக ஏற்கப்படவில்லை என்பதைக் காண வியப்பாக இருக்கும்.

ஆனால் அவர்கள் மூலம் வெளியான அவர்களது அவதாரங்களே குலதெய்வங்கள் என வழிபடப்படுகின்றன. இதை பார்க்கையில் குலதெய்வங்கள் எனும் பெயரில் நாம் செய்யும் வழிபாடு அனைத்துமே பிரதான தெய்வங்களின் அருளை பெறுகின்றன என்பது தெளிவாகும். பிரதான தெய்வங்கள் தம்மை நேரிடையாக வழிபடுவதை விரும்புவது இல்லை.

அதன் காரணம் பிரதான தெய்வங்களை நேரடியாக வழிபட்டு அருள் கிடைக்கும் என்றால் இத்தனை வகைகளிலான தெய்வங்களை பிரும்மன் ஏன் அவதரிக்க வைத்து இருக்க வேண்டும்? அத்தனை தெய்வங்கள் அவதரிக்கவில்லை என்றால் பிரும்மாவின் நாடகங்கள் பூமியில் எப்படி நடத்தப்பட்டு இருக்கும்? அதனால்தான் பல்வேறு நாடக நிகழ்வுகள் நடந்திட பிரதான தெய்வங்கள் மூலம் பல்வேறு தெய்வ அவதாரங்கள் தேவையாக இருந்தன. அவற்றுக்கு முக்கியத்துவம் தாராவிடில் பரபிரும்மனின் படைப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் அல்லவா.

உதாரணமாக பார்வதி தேவியின் அவதாரமான காஞ்சி காமாட்சி ஒரு குடும்பத்தின் குலதெய்வம் என்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனை நிறைவேற குலதெய்வத்தை வேண்டி அந்த குடும்பத்தினர் செய்த பிரார்த்தனைக்கு உரிய அருள் அல்லது பலன் பார்வதி தேவி மூலமே கிடைக்கின்றது. ஆனால் அந்த அருளை நிச்சயமாகப் பெற அந்த குடும்பத்தினர் மேலும் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று பார்வதி தேவியையோ அல்லது வேறு அவதாரங்களையோ தனியாக வணங்கி வேண்ட வேண்டும் என்பது அவசியம் அல்ல.

அதை போலத்தான் பிற பிரதான தெய்வங்களின் அருள் நமக்கு அவர்களது அவதார தெய்வங்கள் மூலம் கிடைக்கும் என்பது பிரும்ம நியதி. அதனால்தானோ என்னவோ பிரதான தெய்வங்களின் பல அவதாரங்கள் பல்வேறு உருவங்களில் தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு ஆலயங்களில் அமர்த்தப்பட்டு வழிபடப்படுகின்றன.

ஏற்கனவே முந்தைய பதிப்பில் பிரும்மனின் நாடகத்தை பூமியிலே நடத்த பல்வேறு தெய்வங்களும், கணங்களும், பல்வேறு நிலைகளில் தோற்றுவிக்கப்பட்டன என்பதை விளக்கி உள்ளேன்.  குலதெய்வங்களும், பிற முதல் நிலை தெய்வங்களும் பிரதான தெய்வங்களின் பல முகங்களே என்பதை ஆழமாக மனதில் கொள்ள வேண்டும். பிரதான தெய்வங்களின் நிழலான அவர்களை பிரதான தெய்வங்களுக்கு இணையான சக்தி உள்ளவர்கள் அல்ல என்பதாக நினைக்கக்கூடாது. அது தவறான கருத்து ஆகும்.

தற்காலத்திய அலுவலக வழிமுறைகளை போல நமக்கு தேவையான காரியங்கள் நிறைவேற கீழ்நிலை அதிகாரி மூலம் மேல் நிலை அதிகாரிகளிடம்  நம் கோரிக்கைகளை அனுப்பி, அவர்கள் தரும் பல்வேறு தொந்தரவுகளையம் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு, அவற்றை சமாளித்து, தமக்கு வேண்டிய காரியத்தை நிறைவேற்றிக்  கொள்வது போலவேதான் பிரதான தெய்வங்களும் தமது கீழ்நிலை தெய்வங்கள் மூலம்  அனுப்பப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றன.

அந்தந்த நிலையில் பிரார்த்திக்கும் பக்தர்களின் தெய்வீக எண்ணத்தையும், அவர்களது நம்பிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும் விதத்தில், குலதெய்வங்கள் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி,  அதன் பிறகும் உண்மையிலேயே அவர்களது பக்தியும், தெய்வ நம்பிக்கையும்  குறைவில்லாமல் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கின்றன. அதன் பிறகே பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி  வைப்பார்கள்.

இவற்றினால்தானோ என்னவோ பிரதான தெய்வங்களான சிவபெருமான், பிரும்மா, விஷ்ணு பகவான், மற்றும் பார்வதி தேவி போன்றவர்கள் நேரடியான குலதெய்வங்களாக ஏற்கப்படவில்லை. மற்றும் பார்வதியின் ஒரு அவதாரமான சரஸ்வதியும் குலதெய்வமாக ஏற்கப்பட்டு உள்ளதாக தெரியவில்லை. ஆனால் பார்வதி தேவியின் இன்னொரு அவதாரமான மஹாலக்ஷ்மி சில குடும்பத்தின் குலதெய்வமாக ஏற்கப்பட்டு உள்ளது தெரிகிறது. இவற்றுக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன என்பது விளங்கவில்லை. 

இந்த கால கணினியைப் போல உலகத்தை சிருஷ்டி செய்த பிரம்மாவிடம் மிகப் பெரிய கணினி இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது. இன்னென்ன தெய்வங்களும், அவதாரங்களும், எந்தெந்த இடங்களில், எந்தெந்த காலகட்டத்தில் அவதரிக்க வேண்டும், அவர்கள் தலைமையில் எத்தனை ஆத்மாக்கள் இருக்கும் போன்ற அனைத்து செயல் திட்டத்தையும் நுண்ணியமாக வகுத்து, அதை செயல்படுத்தியும் உள்ளார் என்பதே வியப்பானது. குறிப்பாக இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன அதிகார வரைமுறை எனது தீர்மானிக்கப்பட்டு அவற்றை மீறும் தெய்வங்களின் அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன என்பது பிரும்ம நியதியின் கூடுதல் அம்சமாக உள்ளது.

அதை போல எந்த ஒரு குடும்பத்தாரும் ஒரு குலதெய்வத்தை வழிபட்டு வந்திருந்தால் அவற்றை உதாசீனப்படுத்துவது கடுமையான தெய்வ குற்றமாக கருதப்படுகின்றது. அதன் விளைவினால் குலதெய்வங்கள் கோபத்துக்கு ஆளாகும் அவர்களது அடுத்த ஏழு தலைமுறையினர்19 அவர்களது வாழ்வில் பல துன்பங்களை சுமக்க வேண்டி இருக்கும். அந்த பாபங்களை போக்கிக் கொண்டு குலதெய்வத்தின்  கோபத்தை தணிக்க அவர்கள் பல பிரார்த்தனைகளையும் பூஜைகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

ஒவ்வோர் தெய்வமும் குறிப்பிட்ட இடத்தில் சென்று அவதரிக்க வேண்டும் என்ற நுட்பமான வழிமுறைகளையும், அவை அவதரிக்க வேண்டிய இடங்களையும் பிரும்மா வடிவமைத்து இருப்பதின் காரணம், அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் சென்று அவதரிக்கக் கூடாது என்பதற்காகவேதான். குறிப்பிட்ட இடம் என்பது சிறிய திட்டு போன்ற இடம் அல்ல, பல சதுர அடி பரப்பளவைக்  கொண்ட இடங்களாகும். குறிப்பிட்ட இடங்களில் சென்று அவதரிக்கும் தெய்வங்கள் அதே இடங்களில் தமது தெய்வீக சக்திக் கதிர்களை பூமிக்குள் இறக்கி வைக்கின்றன.

அந்த தெய்வங்கள் தாம் விரும்பும்  எந்த தோற்றத்திலும் அவதரிக்கலாம் என்பதினால் தாம் விரும்பும் தோற்றத்தை அவர்கள் அங்குள்ள பக்தர்களின் கனவுகளிலோ அல்லது சாமியாடிகள் மூலமோ வெளிப்படுத்தி அந்த உருவில் தமது சிலையை ஆலயம் அல்லது திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து பூஜிக்க ஏற்பாடுகளையும் செய்கின்றன. ஒரு தெய்வம் முதன் முதலில் எந்த இடத்தில் அவதரிக்குமோ, அந்த இடத்தின் பூமிக்குள் அவற்றின் தெய்வ சக்திக் கதிர்கள் புதைந்து இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்யும் பக்தர்களின் உடலில் அந்த அலை கதிர்கள் பாய்ந்து அவர்களுக்கு கண்களுக்குப் புலப்படாத தெய்வ பாதுகாப்பு கவசத்தை தர முடியும் என்றும், அதன் மூலம் அந்த பக்தர்கள் பல நன்மைகளை வாழ்வில் அடைகின்றார்கள் என்பதும் பிரும்ம நியதியின் சில பரிமாணங்கள் ஆகும்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. ஒரு இடத்தில் அவதரித்த தெய்வம் மீண்டும் இன்னொரு இடத்தில் அதே உருவில்  அவதரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்ற பதிலைப் பெறும்.  ஆனால் ஒரு தெய்வத்தின் அதே ரூபம் மற்றும் அதே குணாதிசயங்களையும் கொண்ட பல ஆலயங்கள் பல இடங்களிலும் உள்ளன எனும்போது, அந்த தெய்வத்தை எங்கு வேண்டுமானாலும் சென்று பிரார்த்தனை செய்தால் அதே பலன் கிடைக்குமா என்பதுதான் இந்த கேள்வி எழக் காரணம் ஆகும்.

ஒரு தெய்வத்தின் அதே ரூபம் மற்றும் அதே குணாதிசயங்களையும் கொண்ட எந்த ஆலயத்திலும் சென்று அந்த தெய்வத்தை வணங்கலாம், அதற்கான பொதுவான பலனும்20 எல்லோருக்கும் கிடைப்பதை போலவே கிடைக்கும் என்றாலும், எந்த ஆலயத்தில் அந்த தெய்வத்தின்  மூல சக்தி இருக்குமோ அங்கு சென்று  பிரார்த்தனை செய்து பெறும் பலனும், வேறு இடங்களில் சென்று வழிபட்டுக்  கிடைக்கும் பலனும் ஒரே தன்மை உள்ளவையாக இருக்காது என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

இதை இப்படியாக விளக்க முடியும். உதாரணமாக  ‘X ‘ எனும் தெய்வம் சின்ன கிராமம் என்ற இடத்தில் அவதரித்து அங்குள்ள ஆலயத்தில் வழிபடப்படுகிறது. அதே தெய்வத்தின் அதே உருவிலான சிலைகள் இன்னும்  பல்வேறு ஆலயங்களில் மந்திரங்களை ஓதி, வேத முறைப்படி சடங்குகளை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது என வைத்துக் கொள்வோம்.

மூல ஆலயத்தில் அந்த தெய்வங்களை வழிபட்டு வந்தவர்கள் அந்த மூல ஆலயத்திற்கு செல்வதில் ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு, அங்கு செல்வதை தவிர்த்து விட்டு, அதே தெய்வத்தை தாம் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள ஆலயத்தில் சென்று வழிபடுவதினால் நியாயமான பலன் கிடைக்குமா என்ற எண்ணம் எழுவது தவறா என்றால், ஆமாம், தவறு  என்ற பதிலையே தர முடியும்.

அதன் காரணம் மூல ஆலயத்தில்தான் அந்த தெய்வ சக்தி இறக்கப்பட்டு உள்ளது என்பதினால் அங்கு சென்று வழிபடும்போதுதான் முழுப் பலனையும் அடைய முடியும். அதற்காக பிற ஆலயங்களில் சென்று அதே தெய்வத்தை வணங்குவதில் எந்த தவறும் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 20 மூல ஆலயத்தில் காணப்படும் அதே தெய்வத்தை பிற ஆலயங்களில் வேத விற்பனர்களைக் கொண்டு சடங்குகள் செய்து, மந்திரங்களை ஓதி பிரதிஷ்டை செய்யும்போது, அந்த மந்திர அலைகள் மூல தெய்வத்தின் உண்மையான சக்திக்கதிர்களை  பெற்றுக் கொண்டு வருவதினால் பிற ஆலயங்களில் உள்ள அதே தெய்வ சக்தியில்  மாறுபாடு இருக்காது என்றாலும் அதன் தன்மை நிச்சயம் மாறுபட்டு இருக்கும் என்பதினால் அது பொதுவான பலன்களை அளிக்கும் அளவில்தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையை ஒரு குறிப்பிட்ட தெய்வத்திடம் செய்ய வேண்டும் எனில் மூல ஆலயத்தில் செய்தால்தான் அதற்கான  பலன் கிடைக்கும். மூல ஆலயத்தில் சென்று வழிபடுகையில் ஒருவருக்கு ஏற்படும் சிலிர்ப்பு அல்லது மயிர்கூச்சல் எனப்படும் உணர்வு21 இதை நமக்கு எடுத்து காட்டும்.

சில சமயங்களில் பூமியிலே அவதரிக்கும் தெய்வங்கள் கற்களிலும், பாறைகளிலும் உட்புகுந்து கொண்டு அவற்றுக்குள் தம்முடைய சக்திகளை  வைத்து இருக்கும். அப்போது அந்த பாறைக் கற்கள் அந்த தெய்வங்கள் எந்த உருவில் அவற்றுக்குள் இருந்தனவோ அதே உருவில் உருமாறி விடும்.  நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த உருவங்களிலான சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டு எந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்ததோ அந்த ஆலயத்தில்தான் அந்த தெய்வங்களின் மூல சக்தி சுற்றிக் கொண்டு இருக்கும் என்பதினால் அங்கு சென்று வழிபடுவதில் மூலமே முழு அளவிலான பலன்கள்  கிடைக்கின்றன என்பதான நம்பிக்கை உள்ளது.

21தெய்வங்களின் மூல ஆலயங்களில் சென்று வழிபடுகையில் அங்குள்ள சக்திக்கதிர்கள் அங்கு சென்று வழிபடுபவர்களது உடலில் சென்று அமர்ந்து கொண்டு எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட அலைகளை விரட்டி அடித்தும், தெளிவான மனநிலையைத் தரும் ஒரு தற்காலிக பாதுகாப்பு வளையத்தையும் அவர்களுக்கு தருகின்றன. ஆனால் அந்த கவசம் எத்தனை நாட்கள் அவர்களை பாதுகாத்து வரும் என்பது தெரியவில்லை.

ஆகவேதான் அந்த காலத்தில் நமது முன்னோர்கள் அனைவரும் தத்தம் குலதெய்வ ஆலயங்களுக்கு வருடத்துக்கு ஒரு முறையாவது சென்று வரவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார்கள். மூல தெய்வ ஆலயத்தில்  சென்று வழிபட்டு பலன்களை பெறுவதற்கும், பிற ஆலயத்தில் சென்று அதே தெய்வங்களின் அருளை வேண்டி பெறும் பலன்களின் அளவும் வேறுபட்டே இருக்கும் என்பதினால் ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்துக்கு சென்று, அந்த தெய்வத்தின் மூல ஆலயத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் பாதுகாப்பு வளையத்தை பெற்றுக் கொண்டு வர வேண்டும் என்பதாக மூதையோர் கூறுகின்றார்கள்.


முன்காலத்தில் அனைத்து குடும்பத்தினரும் அவரவருக்கு என ஒரு குலதெய்வத்தை பரம்பரையாக வழிபட்டு வந்தார்கள். தமது குலதெய்வம் தமது சந்ததியினரை பாதுகாத்து அருளும் என்ற நம்பிக்கை இருந்தது. குலதெய்வ வழிபாடு இறந்தவர்களது ஆத்மாக்கள் அமைதியாக இருக்க உதவும் என்றும், அந்த வழிபாடு குடும்பத்தை மேன்மை நிலைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையும் இருந்தது. மேலும் குலதெய்வம் பிற தெய்வங்களை விட அதிக சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கையும் உண்டு.
19 ஏழேழு ஜென்மம் என்பது என்ன? ஏழேழு ஜென்மம் என்பது ஒரு குடும்பத்தின் நாற்பத்தி ஒன்பது வம்சாவளியினரைக் குறிக்கும். கீழுள்ள அட்டவணையைப் பார்த்தால் நாற்பத்தி ஒன்பது வம்சாவழியினர் எப்படி என்பது புரியும்.

ஒரு குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் நாற்பத்தி ஒன்பது சந்ததியினரை தொடர்ந்து காப்பாற்றும். ஆனால் அதன் பின் அந்த குடும்பத்தின் ஐம்பதாவது வம்சாவளியினர் வேறு குலதெய்வத்தை ஏற்க முடியும், அல்லது அதே குலதெய்வத்தை மீண்டும் தமது குலதெய்வமாக ஏற்க முடியும். இதில் ஒரு நியதி உள்ளது. ஐம்பதாவது வம்சாவளியினரும் அதே குலதெய்வத்தை ஏற்றுக் கொண்டால், அவர்களது அடுத்த நாற்பத்தி ஒன்பது தலைமுறையும் அதே குலதெய்வத்தை மட்டுமே ஆராதிக்க வேண்டி இருக்கும்.

இத்தனை இருந்தும் எந்த ஒரு குலதெய்வமும் ஒரு குடும்பத்தின் நாற்பத்தி ஒன்பது வம்சாவளியினரால் தொடர்ச்சியாக வணங்கப்படுவது இல்லை என்பதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. பரம்பரை என்பது ஆண் வாரிசுகளால் மட்டுமே தொடரும். பெண் வாரிசுகள் திருமணம் ஆகி கணவருடைய வீட்டிற்கு சென்றவுடன் அந்தப் பெண்கள் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர் ஆகி விடுகிறார் என்பதினால் அவர்களது குலதெய்வத்தை ஆராதிக்க வேண்டும் என்பது பிரும்ம நியதி ஆகும்.

நாற்பத்தி ஒன்பது வம்சாவழி  கணக்கின் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த பரம்பரையில் ஆண் வாரிசுகள் பிறக்காமல் இருக்கலாம், அதேபோல ஆண் வாரிசுகளுக்கு திருமணம் ஆகியும் குழந்தைகள் பிறக்காமல் போகும் நிலையும் ஏற்படலாம் போன்ற நிலைகளில் வம்சாவளி தொடர்ச்சியும் முடிவுக்கு வந்து விடுகின்றன.

முன் காலங்களில் தாத்தா, மகன், பேரன் என அனைத்து குடும்பத்தினரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அனைவருமே ஒரே வீட்டில் இருக்க இடம் இல்லாமல் அந்த வீடு சிறிய வீடாக இருந்தால் மகன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பக்கத்து இடங்களில் சென்று வசித்து வந்தாலும் ஒரு பண்டிகை அல்லது வீட்டில் விசேஷம் என்றால் அனைவரும் ஒன்று கூடி குலதெய்வ வழிபாடு நடத்துவார்கள். அனைவருமே இருந்த பகுதிகள் பெரும்பாலும் கிராமங்களில்தான் இருந்தன. அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தே ஆலயத்துக்குச் சென்று வழிபடுவார்கள். இந்த கூட்டுக் குடும்ப ஒற்றுமை வம்சாவளியாக தொடர்ந்தது. இதுவே குலதெய்வ வழிபாட்டு முறை வம்சாவளியாக தொடர்ந்த  கதை  ஆகும்.

வேத காலத்தில் ஒரு குடும்பத்  தலைவராக அந்த வீட்டின் தந்தையே இருந்தார். அவர்கள் ஒரே குறிக்கோள் வீட்டின் ஒற்றுமை நிலை நாட்டப்பட வேண்டும்.  குடும்ப ஒற்றுமையை குலைக்க நினைத்தவர்கள்  வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் அல்லது வீட்டினரால் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த மகன் வீட்டின் தலைவராவார். இப்படியாக தொடரும் அந்த குடும்ப வம்சத்தினர் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்திருப்பார்கள். காலப் போக்கில் அந்த தெய்வமே அவர்கள் குடும்பத்தின் குலதெய்வமாகியது.

பல இடங்களில் பூமியில் புதைந்து இருந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டு அவை ஆலயங்களிலோ அல்லது மரங்களின் அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வந்தன. அப்படி கிடைத்த சிலைகளும், தெய்வங்கள் அவதரித்த இடங்களும் கிராமப்புறங்களில் இருந்தன. ஆகவே அந்த காலத்தில் பெரும்பாலான ஆலயங்கள் கிராமங்களில் இருந்துள்ளன.

அவற்றில் சில நகர பகுதிகளாக காலப்போக்கில் மாறி இருந்தாலும் அந்த கிராமங்களும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் அமைந்து இருந்தாலும் அந்த ஆலயங்களில் இருந்த தெய்வங்களே பலருக்கும் குலதெய்வங்களாக இருந்தபோது, நகரங்களில் குடியேறி இருந்த அந்த குடும்ப வம்சத்தினர் அந்த கிராமப் பகுதிகளுக்கு சென்று குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து வந்தார்கள்.

 

Tags :

Share via