புதிதாக 58 வந்தே பாரத் ரயில்கள் உற்பத்திக்கு டெண்டர்- ரயில்வே துறை
மத்திய ரயில்வே துறை சார்பில் புதிதாக 58 வந்தே பாரத் ரயில்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட சொகுசு இருக்கைகளுடன் கூடிய 2 அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் டெல்லியிலிருந்து வாரணாசி மற்றும் கத்ராவுக்கு இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஏற்கனவே 44 வந்தே பாரத் ரயில்களுக்கு டெண்டர் விடுக்கப்பட்டு, 3 தொழிற்சாலைகள் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கியுள்ளன. இதனிடையே கடந்த 15ம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, வருகிற 2023க்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் என கூறியிருந்தார்.
மேலும் அதுதொடர்பாக அவர் ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிதாக 58 ரயில்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024 மார்ச் மாதத்திற்கு முன், வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 102 ஆக உயரும் என ரயில்வே துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Tags :