ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா:கூடுதலாக மேலும் ஒரு பறக்கும் படை

by Editor / 27-01-2023 09:27:37am
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா:கூடுதலாக மேலும் ஒரு பறக்கும் படை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில்  வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்த நிலையில் கடந்த 4ந்தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27- ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கிய நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனே அமலுக்கு வந்தன.

இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களும், மூன்று பறக்கும் படைகளும் தேர்தல் ஆணையம் இதுவரை அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் கூடுதலாக மேலும் ஒரு பறக்கும் படையை அமைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவினர் தொகுதியின் எல்லைகளிலும், தொகுதிக்குள்ளாகவும் வாகன தணிக்கை மேற்கொண்டு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக, ஆவணங்கள் இன்றி எடுத்து வரும் ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்வர் என்று கூறப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1800 425 94890  என்ற இலவச தொடர்பு எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் சுழற்சி முறையில் பணியாளர்கள் இதில் இருப்பார்கள் எனவும், வரக்கூடிய  புகார்களை பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிப்பார்கள் எனவும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via