திருப்பதி கோயில் வரலாற்றில் ஜூலை மாதத்தில், ₹139.45 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக ரூ 139.45 கோடியாக வருவாய் கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை அதுவரை தேவஸ்தான வரலாற்றில் ரூ130.5 கோடியாக வருவாய் இருந்த நிலையில் அந்த வரலாற்றை முறியடிக்கும் விதமாக ஜூலை மாதத்தில் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்தியுள்ளனர். ஜூலை மாதம் 4 ம் தேதி ஒரே நாளில் தேவஸ்தான வரலாற்றில் உண்டியல் மூலம் 6.18 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். கொரோனா பேரிடர் காரணமாக 2020 ஆம் ஆண்டில் 2 மாதங்கள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு படிப்படியாக பக்தர்கள் அனுமதிக்க தொடங்கப்பட்டது. முதலில் ஒரு நாளைக்கு 6000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்பொழுது ஒரு நாளைக்கு 70 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அனைத்தும் நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுவாமி தரிசனத்திற்காக இரண்டு ஆண்டுகளாக வேண்டுதலை நிறைவேற்றாமல் இருந்த பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.இதனால் உண்டியல் காணிக்கையும் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை தினந்தோறும் ரூ.3 முதல் 4 கோடி ரூபாய்க்கு மேல் தேவஸ்தானத்திற்கு வருவாய் வருகிறது.
Tags :