குற்றாலத்தில் சாரல் திருவிழா பொதிகை பெருவிழாவாக கொண்டாட்டம்

by Editor / 06-08-2022 10:35:57am
குற்றாலத்தில் சாரல் திருவிழா பொதிகை பெருவிழாவாக கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வருடம் தோறும் நடத்தப்பட்டு வந்த சாரல் திருவிழாவானது கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், மழை இல்லாத காரணத்தாலும், நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் சாரல் திருவிழாவினை வெகு சிறப்பாக நடத்தத் திட்டமிட்ட மாவட்ட நிர்வாகம், சாரல் திருவிழா, உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா என்று 4 விழாக்களை ஒருங்கிணைத்து பொதிகை பெருவிழா என்ற பெயரில் தற்போது நடத்தி வருகிறது.

குற்றாலம் பகுதியில் உள்ள கலைவானர் அரங்கில் தொடங்கிய இந்த பொதிகை பெருவிழாவில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சாரல் திருவிழாவிற்கான லோகோவை அமைச்சர்கள் வெளியிட்டனர் தொடர்ந்து.

பாரம்பரிய கலைஞர்களுக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கினார்கள் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, குற்றாலம் என்றால் பொதிகையும் பொருநையும் ஒருங்கிணைந்த ஒரு இடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த இயற்கை வளம் கொஞ்சும் இந்த இடத்தில் நடக்கின்ற விழாவில் பங்கேற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வரும் சூழலில் தமிழ்நாடே குற்றாலம் போல் வளம் மிகுந்து காணப்படுகிறது மேன்மேலும் தமிழ்நாடு இதேபோல், வளர்ச்சி அடையும் எனப் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இயற்கை வளம் பொருந்திய இந்த குற்றாலத்தில் முன்பெல்லாம் சாரலே இல்லாமல் சாரல் திருவிழா நடந்துள்ளது. ஆனால், தற்போது அருவிகளில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி ஒரு சூழலில் இந்த சாரல் விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மிகச்சிறிய அறையில் தற்போது நடந்து வரும் இந்த சாரல் விழாவானது அடுத்த வருடம் பெரிய அளவில் நடத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தற்போது குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் வெள்ளப் பெருக்கு காரணமாகக் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஆகவே உரியப் பாதுகாப்புடன் பயணிகள் குளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் என என் சார்பில் கோரிக்கை வைக்கிறேன் எனப் பேசினார்.
 

குற்றாலத்தில் சாரல் திருவிழா பொதிகை பெருவிழாவாக கொண்டாட்டம்
 

Tags :

Share via