தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 23-08-2021 05:38:13pm
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 23) கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நாளை (ஆகஸ்ட் 24) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25, 26 மற்றும் 27 ந்தேதிகளில் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு விவரம் வருமாறு:

கலவை 8 செ.மீ., மாரண்டஹள்ளி, ராஜபாளையம் தலா 7 செ.மீ., நத்தம் 6 செ.மீ., வேலூர், காட்பாடி தலா 5 செ.மீ., உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, கொடைக்கானல் தலா 4 செ.மீ., ஆற்காடு, கிருஷ்ணகிரி, சின்னக்கல்லார், காமாட்சிபுரம், முத்து பேட்டை, திண்டுக்கல், விரிஞ்சிபுரம் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via